பதிவு செய்த நாள்
05
ஜூலை
2011
12:07
புதுச்சேரி : புதுச்சேரி கோவில் குளம் அருகே ஓலைச்சுவடி கிடைத்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி புது சாரம் வெங்கடேஸ்வரா நகரில், பொறையாத்தம்மன் கோவில் உள்ளது. கோவில் குளம் அருகில் காலியாக உள்ள இடத்தை, அப்பகுதி சிறுவர்கள் சிலர், நேற்று முன்தினம் மாலை சுத்தம் செய்தனர். அப்போது, அந்த இடத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகளைக் கண்டெடுத்தனர். சில நாட்களுக்கு முன், புல்டோசர் மூலம், அங்குள்ள காலி இடத்தை சீரமைத்தபோது, பூமிக்கடியில் புதைந்து கிடந்த ஓலைச்சுவடி, வெளியே வந்துள்ளது. ஓலைச்சுவடியைக் கண்டெடுத்த கோபால் என்பவர், அதை தன் வீட்டில் பத்திரப்படுத்தி வைத்தார்.
சப் கலெக்டர் அலுவலகத்தில் ஓலைச்சுவடிகள் ஒப்படைப்பு: தகவலறிந்த உழவர்கரை தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள், கோபால் வீட்டிற்கு நேற்று மாலை சென்று விசாரணை நடத்தினர். ஒலைச்சுவடி கண்டெடுக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்டனர். ஓலைச்சுவடிகளை வருவாய்த்துறையினர் கைப்பற்றி, சப் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ஒலைச்சுவடி பற்றிய விபரம் தொல்பொருள் துறையினருக்குத் தெரிவிக்கப்படும். ஆய்வுக்கு பிறகே ஓலைச்சுவடிகள் எந்தக் காலத்தை சேர்ந்தது, ஓலைச் சுவடிகளில் என்ன எழுதப்பட்டுள்ளது போன்ற விபரங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.