கம்ஹாசுரன் என்னும் அரக்கன் மூவுலகங்களிலும் பல அநியாயங்களைச் செய்து உயிர்களைத் துன்புறுத்தி வந்தான். தேவர்கள் பராசக்தியின் உதவியை நாடி ஓடினர். கருணையே உருவான அம்பிகை, திரிபுர பைரவியாக உருவெடுத்து கோபத்துடன் கிளம்பினாள். விஷயமறிந்த அசுரன், தனக்கு அழிவு நேராமல் இருக்க சிவபெருமானைக் குறித்து தவத்தில் ஆழ்ந்தான். அவன் இறைவனிடம் எவ்வரமும் கேட்கமுடியாதபடி ஊமைய õகும்படி சபித்தாள் அம்பிகை. பேசும் சக்தியற்ற அவன் மூகாசுரன் என்று பெயர் பெற்றான். மூகம் என்றால் ஊமை. கோபம் காரணமாக, மூகாசுரன் முன்னை விட மேலும் மூர்க்கம் கொண்டவனாக அலைந்தான். அவனை அம்பாள் சம்ஹாரம் செய்தாள். இந்த அம்பாள் கொல்லுõர் என்னும் இடத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக்கத் தொடங்கினாள். மூகாசுரனை அழித்ததால் அம்பிகைக்கு மூகாம்பிகை என்று பெயர் ஏற்பட்டது. இங்கு ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பஞ்சலோகசிலை உள்ளது. நான்கு திருக்கரங்களுடன், பத்மாசனத்தில் சங்கு சக்கரத்தை ஏந்தி காட்சி தரு கிறாள். சவுந்தர்யலஹரி என்னும் புகழ்பெற்ற துதியை அம்பிகை மீது ஆதிசங்கரர் இங்கு தான் பாடினார். சவுந்தயர்ய லஹரி என்றால் அழகுக்கலை என்று பொருள். ஈடுஇணையில்லாத அழகுடைய அம்பிகையைப் போற்றும் சவுந்தர்ய லஹரியைப் பாராயணம் செய்தவர்கள் பொன்னும் பொரு ளும் பெற்று மகிழ்வர்.