பதிவு செய்த நாள்
02
ஜூன்
2015
12:06
திருச்சி: திருச்சி அருகே, கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில், பொதுப்பணி துறை பொறியாளர்கள், நேற்று மழை பெய்ய வேண்டி யாகம் நடத்தினர். ஊழல் பட்டியலில், பெயர் இடம் பெறாமல் தப்பிக்கவே, யாகம் நடத்தியதாக, தகவல் பரவியுள்ளது. சென்னையில், கடந்த மாதம், பொதுப்பணி துறையில் உள்ள ஊழல் பொறியாளர்களின் பெயர் பட்டியலை, ஒப்பந்ததாரர்கள் வெளியிட்டனர். இதையடுத்து, கடந்த மாதம், 10ம் தேதி காலை, திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள பொதுப்பணி துறை அலுவலகத்தில், ஒப்பந்ததாரர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.அதில், திருச்சி பொதுப்பணி துறையில், 2011 - -15ம் ஆண்டுகளில், மாபெரும் ஊழல் செய்த, 10 பொறியாளர்கள் யார் என்ற விவரம், விரைவில் வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. போஸ்டர் ஒட்டப்பட்ட சிறிது நேரத்தில் கிழிக்கப்பட்டதால், பொதுப்பணி ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு சார்பில், அன்று காலை, 11:00 மணிக்கு, திருச்சியில், ஆலோசனை நடத்தினர்.இதனால், எப்போது வேண்டுமானாலும், திருச்சி பொதுப்பணி துறையில் ஊழல் செய்த பொறியாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்ற சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் தான், திருச்சி அருகே கல்லுகுழியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று காலை, திருச்சி மண்டல ஆதார அமைப்பு மற்றும் ஆழியாறு வடிநில கோட்டம் சார்பில், வருண ஜெபம் நடந்தது.பய, பக்தியுடன் பூஜைஇதில், பொதுப்பணி துறை செயற்பொறியாளர் செல்வராஜ், துணை தலைமை பொறியாளர் பக்தவச்சலம் உள்ளிட்ட, பலர் பங்கேற்றனர். இரண்டு மணி நேரம் நடந்த யாகத்துக்குப் பின், பொதுப்பணி துறையை சேர்ந்த பொறியாளர்கள், ஊழியர்கள் பங்கேற்ற சிறப்பு பூஜை நடந்தது. கடுமையான வறட்சி ஏற்பட்ட ஆண்டுகளில் கூட, மழைக்காக, அதிகாரிகள், யாகம் நடத்தியதில்லை. ஆனால், திடீரென, மழை வேண்டி பொறியாளர்கள் யாகம் நடத்தி உள்ளனர். ஊழல்வாதிகள் பெயர் பட்டியலில் இருந்து தப்பிக்கவே, யாகம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.