பதிவு செய்த நாள்
02
ஜூன்
2015
12:06
ஊத்துக்கோட்டை: திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், திரளான பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த, பெரம்பூர் கிராமத்தில் உள்ளது தர்மராஜா கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த மாதம் 22ம் தேதி, 105ம் ஆண்டு தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பின், ஒவ்வொரு நாளும், பகாசூரன் சோறு எடுத்தல், திருக்கல்யாணம், நச்சுக்குழி யாகம், படுகளம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இதையொட்டி, காப்பு கட்டிய பக்தர்கள், அங்குள்ள செங்காளம்மன் கோவில் வளாகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று, பெரம்பூர் கிராமத்தில் உள்ள தர்மராஜா கோவில் எதிரே அமைக்கப்பட்ட தீ மேடையில் ஏறி, பக்தியுடன் தீமிதித்து சென்றனர். பின், உற்சவர் திரவுபதி அம்மன், மலர் அலங்காரத்தில் முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.