பதிவு செய்த நாள்
03
ஜூன்
2015
11:06
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் மகாகும்பாபிஷேக விழா இன்று, முளைப்பாரி, தீர்த்தக்குடங்கள் ஊர்வலத்துடன் துவங்குகிறது. காரமடை அரங்கநாதர் கோவிலில், அரசு மற்றும் உபயதாரர் நிதியுதவியுடன், இரண்டு கோடி ரூபாய் செலவில் ஏழுநிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு கோடி ரூபாய் செலவில், புதிய மண்டபங்களும், கோபுரங்களுக்கு வர்ணம் பூசப்பட்டது. மொத்தம், ஆறு கோடி ரூபாய் செலவில், கோவிலில் ஆன்மிக திருப்பணிகள் நடக்கின்றன.இதன் மகாகும்பாபிஷேகம் வரும், 7ம் தேதி நடைபெற உள்ளது. இன்று முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடங்கள் ஊர்வலத்துடன், கும்பாபிஷேக விழா துவங்குகிறது. மாலை, 3:00 மணிக்கு பெட்டத்தம்மன் மலை அடிவாரத்தில் இருந்து, கோவை மெயின் ரோடு வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட உள்ளது. இந்த ஊர்வலத்தில் யானை, குதிரை, பசு மாடு ஆகிய விலங்குகள் முன்னே நடந்து வர, அதன் பின்னால், மேள வாத்தியங்கள் முழங்க நாட்டுப்புற நடனங்கள், படுக நடனம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. 4ம் தேதி காலை, 9:00 மணிக்கு மகா சுதர்ஸன ஹோமும், இரவு, 7:00 மணிக்கு முதல்கால யாக பூஜையும், சாற்றுமுறையும் நடைபெற உள்ளது. வரும், 5ம் தேதி காலை, 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், சதுஸ்தான பூஜையும், இரவு, 7:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும் நடக்கிறது. 6ம் தேதி காலை, 10:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும், மாலையில் விமான கோபுர கலசங்கள் நிறுவுதலும், மாலை, 5:00 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜையும் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை (7ம் தேதி) காலை, 6:00 மணிக்கு ஆறாம் கால யாக பூஜையும், மஹாபூர்ணாஹுதியும் நடக்கிறது. தொடர்ந்து, 8:30 மணிக்கு யாகசாலையிலிருந்து தீர்த்தக் குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. 9:15 மணியிலிருந்து, 9:45 வரை ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுரங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை தக்கார் மற்றும் உதவி ஆணையர் ஜீவானந்தம், கோவில் செயல் அலுவலர் நந்தகுமார் மற்றும் அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.