பதிவு செய்த நாள்
19
ஜூன்
2015
11:06
ராமேஸ்வரம்: "ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சார்பில், பக்தர்கள் வசதிக்கு ரதவீதிகளில் பேட்டரி கார்கள் இயக்கப்படும்,” என, அறநிலையத்துறை ஆணையர் எம். வீரசண்முகமணி தெரிவித்தார்.
கோயில் கும்பாபிஷேக பணிகளை நேற்று பார்வையிட்ட பின், அவர் கூறியதாவது:
ராமேஸ்வரம் கோயிலில் ரூ. 7 கோடியில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. நன்கொடையாளர்கள் மூலம் வடக்கு, தெற்கு ராஜகோபுரங்கள் மற்றும் அம்மன் சன்னதி முன் உள்ள கருங்கல் மண்டப திருப்பணிகள் முடிந்ததும், கும்பாபிஷேகம் நடத்தப்படும் தேதி அறிவிக்கப்படும்.
கோயிலில் திறக்கப்படாமல் உள்ள திருக்கல்யாண மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதிகள் விரைவில் திறக்கப்படும். நான்கு ரதவீதியில் வாகனங்கள் செல்ல தடை உள்ளதால், பக்தர்கள் வசதிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பேட்டரி கார்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோயில் ஊழியர்கள், குருக்கள் நியமனம் குறித்து பரிசீலிக்கப்படும், என்றார்.பின்னர், கோயிலுக்குள் தேங்கும் மழை நீர் வெளியேற நடைபெறும் திட்ட பணிகள் குறித்து, கோயில் இணை ஆணையர் செல்வராஜ், பேஷ்கார் அண்ணாதுரை, கமலநாதன் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தினார்.