ஸ்ரீமந்நாராயணன் நம்மிடம் கொண்டுள்ள பரிவு இவ்வளவு அவ்வளவு என்று அளவிட முடியாதது. எப்பொழுதெல்லாம் நாம் அவனை எண்ணுகிறோமோ அப்பொழுதெல்லாம் நமக்கு அநுக்ரஹம் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறான். நாம் அவனை எண்ணாவிட்டாலும் அவன் நம்மையே நினைத்துக் கொண்டுள்ளான். ஓங்கி உலகளந்த உத்தமனாகத் திகழ்கின்ற நாராயணன், தாய் தன் குழந்தையை அனைத்துக் கொண்டு தூங்குவது போல் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைத்து ஜீவராசிகளின் மீதும் தன் இலச்சினையைப் பதிக்கின்றான். அர்ச்சாமூர்த்தியாகத் திருவேங்கடம் முதலிய திவ்ய க்ஷேத்ரங்களில் எழுந்தருளி தன் திருக்கைகளால் திருவடியைக் காண்பித்து. இந்த திருவடியைத் தஞ்சமாகப் புகுந்தவர்களுக்கு ஸம்ஸார ஸாகரம் என்று சொல்லப்படும் பிறவிப் பெருங்கடல் முழங்கால் அளவே ஆகும் என்று அறுதியிடுகிறார். அபயமுத்ரையைக் காண்பிக்கும் இடங்களிலோ நீ எதற்கும் பயப்பட வேண்டாம். இந்த திருவடிகளைத் தஞ்சமாகப் புகுந்து வேண்டினவர்களுக்கு அவர்கள் வேண்டியதைக் கொடுப்பதற்கே நான் இருக்கின்றேன். எனக்கு நினைவூட்டுதல் தேவையில்லை என்று பறைசாற்றுகிறார்.
ஆச்ரித ஸுலபனான எம்பெருமானின் புகழை நாம் காதால் கேட்க வேண்டும். வாயால் பாட வேண்டும் மனதாலே எண்ண வேண்டும். இதைச் செய்தால் கச்சிதனில் கண் கொடுக்கும் பெருமாளாக எழுந்தருளியுள்ள தேவப்பெருமாள் நம் அகக்கண்களையும் புறக்கண்களையும் திறந்து நாம் கருத (எண்ணின உடனேயே) வரம் கொடுப்பானாம் வரதப் பெருமாள். இப்படி ஆச்ரித ஸுலபனாக உள்ள எம்பெருமானை எப்படிப் புகழ்வது? அதற்கு என்ன தகுதி வேண்டும்? சாஸ்த்ரங்கள் படித்திருக்க வேண்டுமா? உயர் குலத்தில் பிறந்திருக்க வேண்டுமா? எப்பொழுதும் மடியாக (சுத்தமாக) இருக்க வேண்டுமா? ஆண், பெண், சிறுவர், முதியோர் என்று பாகுபாடு உண்டா? என்று எத்தனையோ கேள்விகள் நமக்குள் தோன்றலாம். இவை எல்லாவற்றுக்கும் ஒரே விடை, எம்பெருமானுடைய புகழை, திருநாமத்தைப் பாட வேண்டும் என்கிற எண்ணம் ஒன்றே அதற்குத் தகுதியாகும். வேறு எதுவும் தேவையில்லை. நல்வகையால் நமோ நாராயணாஎன்று எம்பெருமானின் பல திருநாமங்களையும் சொல்லி உனக்கு பல்லாண்டு கூறுவன் என்கிற எண்ணம் தான் தேவை என்று ஆழ்வார் அருளிச் செய்கிறார்.
எப்பொழுதும் நாம் ஒரு செயலில் ஈடுபடுகிறோ மென்றால் அது ஒரு பயனைக் குறித்துதான் இருக்கும். அப்படி இருக்க எம்பெருமானின் திருநாமத்தைப் போற்றுகிறோம் என்றால் அதன் பலன் என்னவாக இருக்கும் என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது. இந்த எண்ணத்தைத் தெளிவிக்கின்றார் குலசேகராழ்வார் முகுந்த மாலையில்.
ஸ்ரீமந்நாம ப்ரோச்ய நாராயணாக்யம் கே ந ப்ராபு, வாஞ்சிதம் பாபிநோஸபி!
என்று நாராயணா! என்கிற திருநாமத்தைச் சொல்லி விட்டு பாபம் பண்ணினவர்களாக இருந்த போதிலும் கூட தாங்கள் விரும்பியதை பெறாதவர்கள் எவரேனும் உண்டோ? யாரும் இல்லை என்பது இதன் பொருள். நாராயண சப்தத்தை மட்டும் சொன்னாலே போதும் எல்லா துக்கங்களிலும் இருந்தும் விடுபட்டு விடுவார்கள்.
லக்ஷ்மீ இல்லாமல் நாராயணன் இல்லை. நாராயணன் இல்லாமல் லக்ஷ்மீ இல்லை. நாராயண சப்தத்தைச் சொன்ன மாத்ரத்தாலே ஸகல ஐச்வர்யங்களும் கிட்டிவிடும். லக்ஷ்மீ இருக்கின்ற இடத்தில் தரித்ரம் கிடையாது. துக்கம் கிடையாது. ஆகையால் இஷ்டப்ராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி என்று சொல்லக் கூடிய புருஷார்த்தம் தானாக, வழிவழியாக நாராயண சப்த மாத்ரத்தை சொல்வதனால் கிட்டி விடும் என்பதில் ஐயமில்லை. இவ்வளவும் நமக்குக் கிடைக்காததற்குக் காரணம் நாம் நாராயண சப்தத்தைச் சொல்வதில் முனையாதது தான்.
சூர்யன் அக்னி முதலிய தேவதைகள் முறையே ஆரோக்யம். ஐச்வர்யம் முதலிய பலன்களைக் கொடுக்க வல்லவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நாராயணனோ ஆரோக்யம் முதலியவை உட்பட எல்லா பலன்களையும் கொடுக்க வல்லவர் என்று மஹரிஷிகள் கொண்டாடுகின்றனர். அப்படிப்பட்ட நாராயணனைக் காட்டிலுமா அவன் திருநாமத்திற்கு ஏற்றம்? ஆம் என்கிறார்கள் திவ்ய ப்ரபந்த உரை ஆசிரியர்கள். நமக்கும் எம்பெருமானுக்கும் எவ்வளவு வாசி உள்ளதோ அவ்வளவு வாசி எம்பெருமானுக்கும் அவன் திருநாமத்திற்கும் உள்ளதாம். நாராயணன் கட்டியாக உள்ள பொன் போன்றவராம். அவன் திருநாமமோ நாம் எடுத்து அணியும்படியான பொன்னாலான ஆபரணம் போன்ற தாம். கட்டிப் பொன்னை வைத்துக் கொண்டு பூணவா முடியும்? ஆகையால் திருநாமமே பணிக்கு வருவதாகும்.
எம்பெருமானின் திருநாமத்திற்கு அவ்வளவு ஏற்றம் இருப்பினும் நமது மனதிற்குள் ஒரு பயம் நடமாடுகிறது. நாம் செய்யக் கூடாதவற்றைச் செய்ய வேண்டியவை என்று நினைத்துச் செய்கின்றோம். ஆனால் செய்ய வேண்டியவற்றையோ செய்யக் கூடாதவை என்று மாறாடி நினைத்து செய்யாமல் இருக்கின்றோம். இப்படி உள்ள நமது பாபத்தையும் போக்கடிக்குமோ? இந்த திருநாமம். கண்டிப்பாகப் போக்கடிக்கும் என்கிறார் ஸ்வாமி தேசிகன். ஸ்வாமி தேசிகன் சரணாகதி தீபிகையில்.
என்கிற ச்லோகத்தில் தீபப்ரகாசனின் தயை இந்த மாதிரி இடத்தில் ப்ரவஹித்து நம்மை பரிசுத்தமாக்குகிறது என்கிறார்.
நாம் விரும்பி எந்த தவறும் செய்வதில்லை. ஆனால் ஸந்தர்ப்ப சூழ்நிலை. நாம் வாழ்வதற்காகச் சில பாபகார்யங்களைச் செய்யப் பண்ணுகிறது. நமது மனதும் இதனால் கறை படிந்ததாக ஆகிறது. பாபம் செய்து வந்த த்ரவ்யங்களைக் கொண்டுதான் அனேகமாக ஜீவிக்கின்றோம். விதி பூர்வமாக நாம் செய்ய வேண்டிய செயலைச் செய்யாமல் இருக்கிறோம். இப்படிப்பட்டவர்களுக்கு நற்கதி உண்டா என்றால் அவர்களுக்கு ஒரே வழி கோவிந்த நாம கீர்த்தனமேயாகும்.
அடுத்து நாம் பக்தி ச்ரத்தையுடன் எவ்வளவோ நல்ல கார்யத்தைச் செய்ய முற்படுகின்றோம். எந்த வைதிககார்யமாக இருந்தாலும் அதில் மந்திரங்களை உச்சரிப்பதனாலோ, த்ரவ்யங்களை சேகரிப்பதிலோ, செயல்முறையிலோ ஏதாவது ஒரு ப்ரகாரம் தோஷம் ஏற்பட்டு விடுகின்றது நம்மை அறியாமலேயே அதற்காகவே ஸர்வ ப்ராயச்சித்த ஹோமம் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த ஹோமம் செய்யும் போதும் குறை வந்தால் என்ன பண்ணுவது? ஸ்வாமி தேசிகன் அபீதிஸ்தவத்தில் யதி க்வசன நிஷ்க்ருதி: பவதி ஸாஸபி தோ ஷாவிலா எதாவது குறையைப் போக்க ஒரு செயல் செய்தோமானல் அதுவும் தோஷத்துடன் சேர்ந்ததாகவே ஆகிறதே என்று அருளிச் செய்கிறார். இப்படிப்பட்ட நிலைமை வரும் என்று மஹர்ஷிகளுக்குத் தெரியும். எனவேதான்.
மந்த்ரத்தினாலோ, செயல் முறையினாலோ, அந்தந்த காலத்திற்கும் இடத்திற்கும் உரித்தான வஸ்துக்களாலோ ஏதாவது குறைகள் ஏற்படுமானால் அந்த குறைகள் எல்லாவற்றையும் குறைவொன்றுமில்லாததாகச் செய்யக் கூடியது எம்பெருமானுடைய திருநாமம் ஒன்றே ஆகும். ஆகையால்தான் பெரியோர்கள் ஸந்த்யாவந்தனம் உட்பட எந்த நல்ல கார்யங்களைச் செய்தாலும் முடிவில் ஸாத்விக த்யாகம் செய்து விட்டு ஸர்வம் ஸ்ரீக்ருஷ்ணார்ப்பண மஸ்து என்று சொல்லி விட்டு க்ருஷ்ண, க்ருஷ்ண என்று எம்பெருமானுடைய திருநாமத்தை பத்து முறையாவது உச்சரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நம் மாயவன் பேர் சொல்லி வாழ்ந்தோமானால் தடங்கலாக இருப்பது எல்லாம் போய் விடும். கெடும் இடராயவெல்லாம் கேசவாவென்ன என்று நம்மாழ்வார் அருளிச் செய்துள்ளார். இதைக் கொண்டு தான் பெரியோர்கள் ப்ரயணத்தின்போது கேசவாய நம சாப்பிடும் போது கோவிந்தாய நம உறங்குவதற்கு முன் மாதவாய நம தூங்கி எழுந்த உடனும், குளிக்கும் போதும் ஹரி ஹரி என்று சொல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள்.
இப்படிப்பட்ட பெருமைகளை உடையது திருமாலின் திருநாமம் என்று உணர்ந்து உச்சரிப்பவர்களுக்கு தான் இந்த பலனா? அல்லது எல்லோருக்குமா என்றால் இதற்கும் ஸ்வாமி தேசிகன் ஒரு எடுத்தக்காட்டுடன் விளக்கம் கூறுக்கின்றார். ஸ்ரீமத்ரஹஸ்ய த்ரயஸாரத்தில் ஒருவன் காட்டின் நடுவில் போய்க் கொண்டிருந்தன. அவனை ஓநாய், நரி போன்ற துஷ்ட ப்ராணிகள் சூழ்ந்து கொண்டு துன்புறுத்த ஆரம்பித்தது. அந்த ஸமயத்தில் குகையிலிருந்து சிங்கம் கர்ஜித்தது. அந்த கர்ஜனையைக் கேட்டவுடன் ஓநாய் முதலிய ம்ருகங்கள் எல்லாம் பயந்து ஓடி விட்டன. அந்த ஸிம்ஹகர்கஜனை போன்ற எம்பெருமானின் திருநாமத்தை நாம் சொல்ல வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் அவசரமாகச் சொன்னோமேயானாலும் நமது பாபங்கள் எல்லாம் ஓடி விடுகின்றன என்கிறார் ஸ்வாமி தேசிகன்.
க்ருதயுகத்தில் எம்பெருமானை த்யானம் பண்ணுவதாலும். த்ரேதாயுகத்தில் அநேக யாகங்களினால் எம்பெருமானை ஆராதிப்பதாலும், த்வாபர யுகத்தில் அவனுக்குக் கைங்கர்யங்கள் செய்வதாலும் என்ன பலன் வருமோ அந்த பலன் கலியுகத்தில் எம்பெருமானின் திருநாமத்தைச் சொல்வதனாலேயே கிடைத்து விடுகிறது.
உலகத்தார் எல்லோரும் இப்படிதான் எம்பெருமானின் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டுள்ளார்களா? நாம் மட்டும் சொன்னால் அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நாம் எண்ணக்கூடாது என்கிறார் ஆழ்வார்.
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடி அவனை உள்ளத்தெண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே என்று எம்பெருமான் திருநாமத்தை நினைக்காதவர்களைப் பற்றி நாம் நினைக்காமல் இருக்கும் காலம் நல்ல காலம் என்கிறார்.
கேசவா! புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ! என்றும் எப்பொழுதும் பகவந்நாம ஸ்மரணம் பண்ணுபவர்களின் பெருமை நம்மால் சொல்ல முடியாது என்கிறார் பெரியாழ்வார்.
ஒவ்வொரு தாய் தந்தையரும் தமது பெண் குழந்தையை கன்யகாதானம் செய்து கொடுக்கும்போதும் தம் பெண்ணை மஹாலக்ஷ்மியாகவும், கன்னிகையை ப்ரதிக்ரஹித்துக் கொள்கிற வரனை மஹாவிஷ்ணுவாகவும் எண்ண வேண்டும் என்று விவாஹ மந்த்ரங்கள் கூறுகின்றன. அங்கும் எம்பெருமானின் திருநாமத்தையே எண்ண வேண்டும்.
நாராயண நாமம் நமது பாபத்தைப் போக்கடிப்பது வழிவழியாக மோக்ஷத்தைக் கொடுப்பதும் இருக்கட்டும். இம்மையில் என்ன பலன் நமக்குக்கொடுக்கும் என்பது அடுத்த வினா, எந்த விதமான பலனையும் உத்தேசிக்காமல் அநந்ய ப்ரோயஜனமாக எம்பெருமானின் திருநாமத்தை ஸ்மரணம் செய்தோ கீர்த்தனம் செய்தோமானால் இம்மையிலும் ஆநுஷங்கிகமாக எல்லா நற்பலன்களையும் கொடுக்கும் என்பதில் ஸந்தேகமில்லை. இதற்கு வேதத்தில் வகுத்துள்ள ஒரு வழியைப் பார்ப்போமாக, ஒவ்வொரு சுபகார்யங்களிலும் பெரியோர்கள் ஆசிர்வாதம் செய்யும்போது சொல்லப்படும் வேத மந்த்ரங்களின் பொருளைப் பார்த்தோமானால் இது நன்கு விளங்கும் ஆசாஸ்தே ஸயம் ய ஜமாநோ ஸஸௌ என்று தொடங்குவது அந்த மந்த்ரம். ஸ்வர்கம் முதலிய பலன்களைக் குறித்து யஜமானன் யாகம் செய்தானேயானாலும் அவனுக்கு நீண்ட ஆயுளையும், நன்மகளைப் பெறுவதையும், எல்லோராலும் கொண்டாடப்படும் நிலைமையையும், மீண்டும் தர்ம கார்யங்கள் செய்ய எண்ணம் ஏற்படும்படியும். மிகச் சிறந்த ஸ்தானத்தை அடைவதையும், உலகோர் எல்லாம் விரும்பி போற்றும் படி உள்ள நிலையும் பெற வேண்டும் என்று ருத்விக்குகள் ஆசாஸனம் செய்கிறார்கள். அவ்வாறே எம்பெருமானின் திருநாமம் குலம் தரும். செல்வம் தந்திடும். பெற்றதாயினும் ஆயின செய்யும். நலம் தரும் என்கிறார் திருமங்கை மன்னன். திருமாலின் திருநாமத்திற்கு நிகர் ஏது?