அயோத்தி என்றதும், ராமபிரான் ஆட்சி செய்த அயோத்தி தான் நம் நினைவில் எழும். தமிழகத்தில் சேலம் அருகிலும் ஒரு அயோத்தி இருக்கிறது. இவ்வூரை அயோத்தியாபட்டினம் என்பர். யுத்தம் என்றால் போர். யுத்தமே இல்லாத இடத்தை அயுத்தம் என்பர். அயுத்தம் என்பதே அயோத்தி என்று மருவிவிட்டது. அயோத்தியாபட்டினத்தில் ராமர் பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சி தருகிறார். இலங்கையில் ராவணசம்ஹாரம் முடிந்து, மீண்டும் அயோத்தி வந்த ராமபிரான் பட்டம் சூடிக் கொண்டார். ஆனால், அதற்கு முன்பே, விபீஷணர் ராமனிடம் பட்டாபிஷேக கோலம் காணவேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தார். அதன்படி, அவருக்கு காட்சி அளித்த தலமே அயோத்தியாபட்டினம். சீதையோடு காட்சிதரும் இவர், கோதண்டராமர் என்னும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். ராமர் வில்லேந்தி இருக்க, லட்சுமணர் உடைவாளை ஏந்தி நிற்கிறார். பரதன் வெண் கொற்றக்குடையையும், சத்ருக்கனன் வெண்சாமரத்தை வீசிக் கொண்டும் உள்ளனர். கோயிலுக்குச் சற்று தள்ளி அனுமனுக்கு சன்னதி உள்ளது. சேலத்திலிருந்து அரூர் செல்லும் வழியில் 10கி.மீ., தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.