கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் அமைந்துள்ள தலம் கதிராமங்கலம். இங்கு கோயில் கொண்டிருக்கும் வனதுர்க்கையின் முன்பக்கம் அம்மனின் உருவமாகவும், பின்பக்கம் பாம்பு வடிவிலும் காட்சிதரும். பொதுவாக துர்க்காதேவி வடக்கு நோக்கி இருப்பாள். ஆனால், இங்கு மட்டும் கிழக்கு நோக்கி காட்சி தருவது மாறுபட்டதாகும். இந்த வனதுர்க்கை தினமும் காசிக்குச் சென்று வருவதாக ஐதீகம். இதற்காக, அம்பிகையின் விமானத்தில் ஒரு சாண் அளவுக்கு துவாரம் விடப்பட்டுள்ளது. நாள்தோறும் ஆகாய மார்க்கமாக காசி சென்றுவருவதால் இவ்வனதுர்க்கைக்கு ஆகாசதுர்க்கை என்ற சிறப்புப் பெயர் வந்தது. தினமும் ராகுகாலத்தில் ராகுபகவான் இந்த துர்க்கையை வழிபாடு செய்வதால், ராகுகாலவழிபாடு இங்கு சிறப்பு. ராகுதோஷத்தால் திருமணத்தடை, புத்திரதடை உள்ளவர்கள் வழிபாடு செய்தால் தோஷம் விலகும்.