பதிவு செய்த நாள்
30
ஜூன்
2015
05:06
காரைக்கால்: காரைக்கால் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார். இவரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனி கோவில் உள்ளது. காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடக்கிறது. இத்திருவிழா கடந்த 7ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, நேற்று மாலை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. மணமகன் பரமதத்தர் பட்டாடை, நவமணி மகுடம், ஆபரணங்கள் அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். புனிதவதியார் பட்டுபுடவை உடுத்தி மணமகள் கோலத்தில் எழுந்தருளினார். பாரம்பரியபடி திருமண மேடையில் மாப்பிள்ளை வீட்டாருக்கும், மணமகள் வீட்டார் கவுரவிக்கப்பட்டு தாம்பூலம் மாற்றிக் கொண்டனர். பின், யாகம் வளர்க்கப்பட்டு திருமணவிழாவிற்கான சடங்குகள் நடந்தது. காலை 10.30 மணிக்கு மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, வேதமந்திரங்கள் முழங்க புனிதவதியாருக்கு, பரமத்தர் திருமணம் நடந்தேறியது. ஆலய குருக்கள் புனிதவதியாருக்கு மாங்கல்யம் அணிவித்தார். பின், மகா தீபாராதணை நடந்தது. திருக்கல்யாண வைபவத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மாங்கல்யம், மஞ்சள், குங்குமம், மாங்கனியுடன் கூடிய தாம்பூல பை வழங்கப்பட்டது.