பதிவு செய்த நாள்
07
ஜூலை
2015
11:07
திருவள்ளூர்: குருப்பெயர்ச்சியை ஒட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, பல்வேறு கோவில்களில் நேற்று முன்தினம், இரவு முதல் குருபெயர்ச்சி பரிகார யாகம் நடத்தப்பட்டது. குரு பகவான் கடக ராசியில் இருந்து, சிம்ம ராசிக்கு நேற்று முன்தினம் இரவு இடம் பெயர்ந்தார். இதை ஒட்டி, திருவள்ளூர் பூங்கா நகரில் உள்ள யோக ஞான தட்சிணாமூர்த்திக்கு, அன்று இரவு 8:00 மணி முதல், கணபதி பூஜை, சூக்த ஹோமம், காளி ஹோமம், யோகஞான தட்சிணாமூர்த்தி அஸ்த்ர ஹோமம், மூலமந்திர ஹோமம் நடந்தது. பின்னர், 108 லிட்டர் பாலாபிஷேகமும், தொடர்ந்து, இரவு 11:00 மணியளவில், மகா தீபாராதனையும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், கும்மிடிப்பூண்டி அடுத்த, புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பார்வதி அம்பிகை உடனுறை பாலீஸ்வரர் கோவிலில் குரு பகவானுக்கு, சிறப்பு 108 கலச அபிஷேகம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி எஸ்.பி.முனுசாமி நகரில், உள்ள சித்தி விநாயகர் கோவில், எம்.எஸ்.ஆர்., கார்டனில் உள்ள குருதக்ஷிணாமூர்த்தி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், குரு பகவான் பரிகார ஹோமம் நடத்தப்பட்டது. இதில், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிகளை கொண்ட பக்தர்கள் பரிகார ஹோமம் செய்தனர்.