பதிவு செய்த நாள்
07
ஜூலை
2015
11:07
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், குருப்பெயர்ச்சி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இதையொட்டி, குருபகவானுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் நடந்தன. அங்கு 12 ராசிகள் வரையப்பட்டு, அதில் குருபகவான் எந்த ராசிக்கு இடம் பெயர்கிறார் என்பதை விளக்கும் வகையில் குருபகவான் சிலையும் வைக்கப்பட்டிருந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி தென்சங்கம்பாளை யம் ஸ்ரீ ஆதீஸ்வரி சமேத ஆதீஸ்வரர் கோவிலில், குருப்பெயர்ச்சியாக பெருவிழா நேற்றுமுன்தினம் நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு மங்கள இசை, வேதபாராயணம், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், வேதிகார்ச்சனையும்; காலை 6:00 மணிக்கு அக்னிகார்யம் பரிகார ராசிகளுக்கு விசேஷ ேஹாமம், காலை 8:00 மணிக்கு பூர்ணாஹுதி, உபசார பூஜை, மகா தீபாராதனை, ஸ்ரீ குருபகவானுக்கு 108 சங்கு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகளும் இடம்பெற்றன.
பொள்ளாச்சி அருகேயுள்ள ஒடையகுளம் பேரூராட்சி ராஜராஜேஸ்வரி காமாட்சியம்மன் கோவிலில், குருப்பெயர்ச்சி சிறப்பு வேள்வி நேற்று நடந்தது. குருபகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரவேசித்ததையடுத்து மாலை 6:00 மணிக்கு, கோவில் நவக்கிரக மண்டபத்தில் திருக்குட வழிபாடு, சிறப்பு வேள்வி, அபிேஷகம், அலங்கார தீபாராதனைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி அருகேயுள்ள கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவில், பொள்ளாச்சி பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்களும் பங்கேற்று குருபகவானை வழிபட்டனர்.வால்பாறை: வால்பாறையில் நேற்று நடந்த குருப்பெயர்ச்சி பரிகார பூஜையில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் நேற்று காலை, 9:00 மணிக்கு குருப்பெயர்ச்சி யாகபூஜை துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு அபிேஷக பூஜையும், பரிகார பூஜையும் நடந்தன. இதில், வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியிலிருந்தும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆனைமலை: ஆனைமலை செல்வ கணபதி கோவிலில் குருபகவானுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் நடந்தன. விழாவையொட்டி, 12 ராசிகளுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைப்பெற்றன. ஆனைமலை ஏபிடி திருமண மண்டபத்தில் நடந்த குருப்பெயர்ச்சி விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். குருபகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரவேசித்ததையடுத்து திருக்குட வழிபாடு, சிறப்பு வேள்வி, அபிேஷகம், அலங்கார தீபாராதனைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன. பக்தர்கள் வழிபடுவதற்காக குருபகவான் சிலையும் வைக்கப்பட்டிருந்தது. கோட்டூர் ஸ்ரீகமல காமாட்சியம்மன் கோவிலில் நேற்று காலை, 9:00 மணி முதல் குருப்பெயர்ச்சி யாக பெருவிழா நடந்தது.