பதிவு செய்த நாள்
17
ஜூலை
2015
11:07
சேலம்: சேலத்தில் பிரசித்தி பெற்ற தேங்காய் சுடும் பண்டிகை இன்று மாலை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அளிஞ்சி குச்சி, தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்களின் விலை, நேற்று மாலை உயர்ந்தது.சேலத்தில், ஆடி, 1ம் தேதி, மாலை தேங்காய் சுடும் பண்டிகை கோலாகலமாக நடப்பது வழக்கம். வாழ்க்கையில் எல்லா வளமும் வேண்டி, முக்கண் கொண்ட தேங்காயை கொண்டு, பூஜை செய்வது வழக்கம்.அந்த வகையில், இன்று மாலை, தேங்காய் சுடும் பண்டிகையில், சிறுவர், சிறுமியர், புதுமணத்தம்பதியர், அதிக அளவில் கலந்து கொள்வர். இன்று மாலை, நடக்கும் தேங்காய் சுடும் பண்டிகையை முன்னிட்டு, சேலத்தின் புறநகர் பகுதியில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் அளிஞ்சி குச்சிகளை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.நேற்று முன்தினம், ஐந்து, ஏழு ரூபாய்க்கு விற்ற அளிஞ்சி குச்சி, நேற்று மாலை, எட்டு ரூபாய் முதல், 10 ரூபாய் வரை விற்பனையானது. தேங்காய் ரகம் வாரியாக நேற்று மாலை, இரண்டு ரூபாய் முதல், ஐந்து ரூபாய் வரை, விலை உயர்ந்தது.நேற்று முன்தினம் நடுத்தர தேங்காய், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று மாலை, 12 ரூபாய்க்கு விற்றது.
இதே போல், பூஜையில் பயன் படுத்தும் எள், வெல்லம், அவள், பொரி ஆகியவற்றின் விலை, நேற்று உயர்ந்தது.பூஜை பொருட்கள் விலை உயர்ந்த போதிலும், பொதுமக்கள் பண்டிகை என்பதால், விலையை பொருட்படுத்தாது, பொருட்களை வாங்கிச் சென்றனர்.பூஜை பொருட்களின் விலை, இன்று காலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர். கோவில்களில் சிறப்பு பூஜைஆடி முதல் நாளான இன்று, பக்தர்களின் வசதிக்காக இன்று காலை, 5 மணிக்கு கோவில்களின் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடக்கிறது. சேலத்தின் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், கோட்டை பெருமாள் கோவில், ஊத்துமலை முருகன் கோவில் உட்பட சேலம் மாநகர் புறநகரில் உள்ள அனைத்து கோவில்களிலும், சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த பூஜைகளில் அதிக அளவில் புதுமண தம்பதியர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவில்களில் இன்று கூட்டம் அதிகரிக்கும் என்பதால், அனைத்து கோவில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.