பதிவு செய்த நாள்
22
ஜூலை
2015
11:07
சேலம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்ய, கங்கோத்திரியில் இருந்து, 1,008 லிட்டர் கங்கை நீருடன், பாத யாத்திரை மேற்கொண்டுள்ள வடமாநில இளைஞர்கள், நேற்று சேலம் வந்தனர்.டில்லியை, சேர்ந்த மனிஷ் கோயல், லட்சுமன் பண்டிட், ஓம்பிரகாஷ் ஆகிய மூன்று இளைஞர்கள், இமயமலையில் புனித கங்கை நதி உற்பத்தியாகும், கங்கோத்திரியில் இருந்து, 1,008 லிட்டர் கங்கை புனித நீரை, சிறப்பு புஜை செய்து, எடுத்து வந்துள்ளனர். மே 17ம் தேதி, இமயமலை அடிவாரத்தில் இருந்து, புனித பயணத்தை ஆறு பேர் துவக்கினர். மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா வழியாக, நேற்று சேலம் வந்தனர்.சேலத்தில் சிறிது நேரம் தங்கி ஓய்வு எடுத்த அவர்கள், மாலையில் ராமேஸ்வரத்துக்கு புறப்பட்டு சென்றனர். வரும் வழியில் உள்ள புனித ஸ்தலங்களில் வழிபாடு மேற்கொண்டபடி வரும் இவர்கள், ஆடி அமாவாசை தினமான, ஆக., 14ல், ராமநாத சுவாமிக்கு, கங்கை புனித நீரைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். குழுவைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் கூறுகையில், நாடு வளம் பெறவும், இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களை காக்கவும், உலக ஒற்றுமையை வலியுறுத்தி, இந்த புனிதமான கங்கை நீரை, பாதையாத்திரையாக எடுத்துச் செல்கிறோம். ராமேஸ்வரத்தில் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள, எங்களின் உறவினர்களும் வருகை தர உள்ளனர், எனக் கூறினார்.