பதிவு செய்த நாள்
16
ஜூலை
2011
10:07
கும்பகோணம் : கோவிந்தபுரம், ஸ்ரீவிட்டல் ருக்மணி பாண்டுரங்கன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரத்தில், ஸ்ரீவிட்டல் ருக்மணி பாண்டுரங்கன் கோவில் கட்டப்பட்டுள்ளது. ஜெயகிருஷ்ண தீட்சிதர் என்ற விட்டல்தாஸ் மகராஜ், பல கோடி ரூபாய் மதிப்பில், மகாராஷ்டிர மாநிலம், பண்டரிபுரத்தில் உள்ள போலவே, இக்கோவிலை அமைத்துள்ளார். பண்டரிபுரத்திலிருந்து வந்தருளிய பாண்டுரங்கனும், ருக்மணியும், புதிய கோவிலில் எழுந்தருளுகின்றனர். மகாமண்டபம், அர்த்தமண்டபம், நாமசங்கீர்த்தன கூடம், அன்னதானக்கூடம், மகாபக்த விஜயத்தில் இடம்பெற்றுள்ள பக்த சிரோண்மணிகளின் சுதை சிற்பங்கள், பொன் போன்று ஒளிரும் மேல் விதானம், மடப்பள்ளி போன்றவை, பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பசுக்களுக்கான பிரத்யேக கோசாலை அமைந்துள்ளது. விட்டல்தாஸ் மகராஜ், நாடெங்கும் நாமசங்கீர்த்தனம் செய்து, பக்தர்களின் கைங்கர்யத்துடன் கோவில் திருப்பணி செய்துள்ளார். நேற்று காலை 9.53 மணிக்கு, விமான கும்பாபிஷேகத்தை, விட்டல்தாஸ் மகராஜ் நடத்தி வைத்தார். தொடர்ந்து சுவாமி, தாயார் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விசேஷ தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு மண்டலாபிஷேக துவக்கத்தையொட்டி, மகாஅபிஷேகம் நடந்தது. கடந்த 9ம் தேதி முதல் நேற்று முடிய, 24 மணி நேரமும் நாமசங்கீர்த்தனம், சொற்பொழிவு, பக்திநடனம், இன்னிசை போன்றவை நடந்தன. சேங்காலிபுரம் ராம தீட்சிதர் முன்னிலை வகித்தார். கோவில் திருப்பணி வேலைகளில் மகாராஷ்டிர மாநில ஸ்தபதி பாலாஜி, சென்னை ஸ்தபதி செல்வநாதன், பொறியாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். 100 கோடி விட்டல் நாமங்களை, கீழே உள்ள அறையில் வைத்து, அதன் மேலே சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.