பதிவு செய்த நாள்
16
ஜூலை
2011
10:07
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகம் சார்பில் கபிலர் விழா நாளை துவங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகம் சார்பில் 36ம் ஆண்டு கபிலர் விழா நாளை காலை 8 மணிக்கு துவங்குகிறது. சென்னை தமிழ் இசைச் சங்க இசைக் கல்லூரி நாதஸ்வர தவில்துறை ஆசிரியர் மற்றும் மாணவர்களின் மங்கள இசையுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. தொடர்ந்து 10 மணிக்கு ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமி அருளாசி வழங்குகிறார். 11 மணிக்கு இசை அரங்கு, 12 மணிக்கு சீர்காழி தமிழிசை மூவர் பாடல்கள் இசை அரங்கம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு நாதஸ்வர இசை அரங்கம், 6 மணிக்கு திருமுறை இசை அரங்கம், 7 மணிக்கு நாட்டிய அரங்கம் நடக்கிறது. ஆதிசங்கர் எம்.பி., கலைஞர்களை பாராட்டி உரை நிகழ்த்துகிறார். மறுநாள் 18ம் தேதி காலை 8.30 மணிக்கு மங்கள இசை, 9.15 மணிக்கு திருமுறை, 10 மணிக்கு எம்.பி., ஆனந்தன் தலைமையில் இலக்கிய விழா நடக்கிறது. மாலை 5 மணிக்கு கபிலர் குன்றில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு விழா அரங்கை அடைகிறது. பின் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., சிவராஜ் பரிசளிக்கிறார். தஞ்சை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ராசேந்திரன் தலைமையில் கபிலர் விருது, கபிலவாணர் பட்டம் வழங்கும் விழா நடக்கிறது. முனைவர் ச.வே.சுப்பிரமணியனுக்கு திருப்பனந்தாள் தமிழ்க் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பசுபதி கபிலர் விருது கபிலவாணர் பட்டத்தை வழங்குகிறார். அஞ்சலி நாட்டியாலயா குழுவினரின் நாட்டியம் நடக்கிறது. மூன்றாம் நாள் 19ம் தேதி காலை 10 மணிக்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமையில் நலவாழ்வு அரங்கம், மாலை 5 மணிக்கு சற்குருநாதனின் இசை அரங்கம், 7 மணிக்கு வேளாண் அரங்கமும் நடக்கிறது. தொடர்ந்து 20ம் தேதி காலை 10 மணிக்கு சிவசுப்ரமணியன் தலைமையில் சங்கப்பலகை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு காயத்திரி கிரீஷ் இன்னிசை, இரவு 8 மணிக்கு நேர்மையின் சிகரம் பட்டத்தை முன்னாள் காவல் துறை தலைவர் நடராஜ், தொண்டின் சிகரம் பட்டத்தை நாயன்மார்களுக்கு கோவில் கட்டும் சங்கர் ஆகியோருக்கு தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் வழங்கி பாராட்டுகிறார். இதனையடுத்து 21ம் தேதி காலை 10 மணிக்கு சத்தியசீலர் தலைமையில் வழக்காடு மன்றம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சத்தியசீலன் நடுவராக இருந்து இராம காதையில் மானுட மனதை ஈர்க்க வல்லது சகோதர பாசமே! பிற உயிரிடத்து மிக்க அன்பே! பகைவரை மன்னிக்கும் மாண்பே! ஆகிய தலைப்புகளில் பட்டி மன்றம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.