பதிவு செய்த நாள்
07
ஆக
2015
10:08
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம், கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. கடலுõர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம், இன்று (7ம் தேதி) துவங்கி, 17ம் தேதி முடிகிறது. இதையொட்டி, இன்று காலை விருத்தாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, ஆழத்து விநாயகர், விருத்தாம்பிகை அம்மன் பல்லக்கில் எழுந்தருள காலை 7:15க்கு மேல் 9:00 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் விருத்தாம்பிகை அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். தினசரி காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு அலங்கரித்த கிளி வாகனம், பூத, யானை, கமலம், வெள்ளி அன்னம், குதிரை வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்வாக வரும் 15ம் தேதி காலை 7:00க்கு மேல் 8:30க்குள் தேரோட்டம், 16ம் தேதி ஸ்படிக பல்லக்கில் விருத்தாம்பிகை அம்மன் வீதியுலா, 17ம் தேதி அதிகாலை 5:00க்கு மேல் 6:30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.