பதிவு செய்த நாள்
07
ஆக
2015
11:08
சென்னிமலை : சென்னிமலை முருகனுக்கு, ஸ்ரீமுருகன் மங்கள வார விழாக்குழு சார்பில் வழங்கப்பட்ட வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாட்டு நிகழ்த்தாமல், அறநிலையத்துறையினர் மெத்தனம் காட்டுகின்றனர். ஸ்ரீமுருகன் மங்கள வார விழாக்குழு, சென்னிமலையில் கடந்த, 20 ஆண்டுகளாக செயல்படுகிறது. இக்குழுவினர், இக்கோவிலுக்கு பல திருப்பணிகளை செய்துள்ளனர். குறிப்பாக வேங்கை மரத்தேர் செய்து கொடுத்து, வாரந்தோறும் செவ்வாய் கிழமை இரவு, ரத ஊர்வலம் நடத்தி வருகின்றனர். அப்போது, மலைக்கோவிலில் அதிக பக்தர்கள் குவிவர். இவர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.கடந்தாண்டு நவ.,ல், 14 லட்சத்தில், 22.5 கிலோ வெள்ளியில், வெள்ளி மயில் வாகனம், குடை, கவசம் செய்து கொடுத்தனர். அதன்பின், ஒரு நாள் மட்டும், வெள்ளி மயில் வாகன புறப்பாடு, வெள்ளோட்ட விழா நடந்தது. அதன்பின், மலைக்கோவிலில் பாதுகாப்பு இல்லை எனக்கூறி, கிழக்கு ராஜா வீதி கைலாச நாதர் கோவிலில் பூட்டிவிட்டனர்.
கடந்த, 10 மாதங்களுக்கு மேலாக, வெள்ளி மயில் வாகன புறப்பாடு நடக்கவில்லை.பல பக்தர்கள், பணம் செலுத்தி, வெள்ளி மயில் வாகனப்புறப்பாடு நடத்த தயாராக இருந்தும், அதற்கு கட்டணம் நிர்ணயம் செய்வது, புறப்பாடு நேரம் ஒதுக்குவது என காரணம் கூறி, மெத்தனம் காட்டுகின்றனர்.இதுகுறித்து, ஸ்ரீமுருகன் மங்கள வார விழாக்குழு நிர்வாகி சுரேகா செல்வகுமார் கூறியதாவது: இதுபற்றி நாங்கள், பல முறை கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலைய துறை அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. எங்கள் அமைப்பு சார்பில், வாரத்தில் ஒரு நாள் நிர்ணயம் செய்யும் கட்டணம் செலுத்தி, புறப்பாடு செய்ய தயாராக இருக்கிறோம். ஏதோ, நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது. அறநிலைய துறை உயர் அதிகாரி கூறியதாவது:வெள்ளி மயில் வாகனம் வழங்கிய ஸ்ரீமுருகன் மங்கள வார விழா குழுவில், தி.மு.க.,வை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் நிர்வாகிகளாக உள்ளனர். அதனால் ஆளும் கட்சியினர், வெள்ளி மயில் புறப்பாடு செய்யவோ, மலை கோவிலுக்கு கொண்டு செல்லவோ நடவடிக்கை எடுக்கக் கூடாது, என, வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர், என்றார்.தி.மு.க., ஆட்சியில் குடமுழுக்கு நடத்திய கோவில்களில் பூஜையை நிறுத்த முடியுமா என ஆளும் கட்சியினர் சிந்திக்க வேண்டும். தமிழ் கடவுள் புறப்பாட்டிலும், அரசியலை கொண்டு வந்ததால், அறநிலையத்துறை அதிகாரிகள் மீது, பக்தர்கள் கொதிப்படைந்துள்ளனர்.