பதிவு செய்த நாள்
07
ஆக
2015
12:08
ஆலங்குடி : ஆலங்குடி நாடியம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு, மது எடுப்பு திருவிழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அருள்பாலித்து வரும் நாடியம்மன் கோவிலில், ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விவசாயம் செழிக்க வேண்டி ஜூலை, 29ம் தேதி முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று முன்தினம் மது எடுப்பு திருவிழா நடைபெற்றது. தென்னம்பாளைகள் வைத்த குடங்களை மல்லிகை மலர்களால் அலங்கரித்து, பெண்கள் தலையில் சுமந்தவாறு, அம்மன் பாடல்களை பாடியபடி நாடியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து அம்பாள் முன் மதுக்குடங்களை இறக்கி வைத்தனர். கோவில் பூசாரி தீப ஆராதனை செய்து, பிரசாதம் வழங்கினார்.நிகழ்ச்சியில் ஆலங்குடி நாட்டைச் சேர்ந்த ஆலங்காடு, பள்ளத்தி விடுதி, சம்புரான்பட்டி, கல்லாலங்குடி, சூரன்விடுதி, ஆலங்குடி ஆகிய கிராமங்களிலிருந்து மது எடுத்து வந்தனர்.விழா ஏற்பாடுகளை தக்கார் வேலுச்சாமி தொண்டைமான் செய்தார்.