பதிவு செய்த நாள்
19
ஆக
2015
12:08
மோகனூர்: பாலதண்டாயுதபாணி ஸ்வாமி கோவிலில், நாளை (ஆக., 20) கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது. மோகனூர் அடுத்த, என்.புதுப்பட்டியில், மிகுந்த பொருட்செலவில் பாலதண்டாயுதபாணி கோவில் திருப்பணி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், நாளை (ஆக., 20) கும்பாபிஷேக விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, தீபாராதனை, பிரசாதம்வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 8.30 மணிக்கு, சாந்தி ஹோமம், அக்னி ஸங்க்ரஹணம், தீர்த்தக்குடம் ஊர்வலம், யாகசாலை அலங்காரம் நடந்தது. மாலை, 5.30 மணிக்கு, புண்யாஹவாசனம், ரஷாபந்தனம், கும்ப அலங்காரம், முதற்கால யாகபூஜை, தீபாராதனையும் நடந்தது. இன்று காலை, 9 மணிக்கு, இரண்டாம் காலயாக பூஜை, பிரசாதம் வழங்குதல், மாலை, 5.30 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜை, பூர்ணாகுதியும் நடக்கிறது. நாளை (ஆக., 20) காலை, 7.35 மணிக்கு, நாடி சந்தானம், கலசங்கங்கள் புறப்பாடு நடக்கிறது. அதையடுத்து, காலை, 9.35 மணிக்கு, பாலதண்டாயுதபாணி விமானம் மற்றும் பரிவார விமானங்களுக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. தொடர்ந்து, காலை, 9.45 மணிக்கு, கும்பாபிஷேகம் சிறப்பாக நடக்கிறது. அதைதொடர்ந்து, மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவில், பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, திருப்பணிக்குழுவினர் செய்துள்ளனர்.