பதிவு செய்த நாள்
21
ஆக
2015
11:08
பெரிய நாகபூண்டி: திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று, கோலாகலமாக நடந்தது. அதை தொடர்ந்து, அக்னி வசந்த உற்சவம், கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆர்.கே.பேட்டை அடுத்த, பெரிய நாகபூண்டி, கங்கமாம்பாபுரம் கிராமத்திற்கு இடையே, ஏரிக்கரையில் பஞ்ச பாண்டவர் உடனுறை திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சீரமைப்பு பணி, இரண்டு மாதங்களாக நடந்து வந்தது. பணிகள் நிறைவடைந்ததை ஒட்டி, நேற்று காலை, கோவில் கோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கான யாகசாலை பூஜை நேற்று முன்தினம் காலை கணபதி பூஜையுடன் துவங்கியது. அன்று மாலை வாஸ்து சாந்தி, பிரவேசபலி முதல் கால யாகசாலை பூஜையும் நடத்தப்பட்டன. நேற்று காலை 5:30 மணிக்கு மகாசங்கல்பம், யாத்ராதானமும், 9:00 மணிக்கு புனிதநீர் கலசங்கள், கோவில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, மூலவர் மற்றும் கொடிமரத்திற்கும் கலச நீர் அபிஷேகம் நடந்தது. காலை 10:00 மணிக்கு, அக்னி வசந்த உற்சவத்திற்கான கொடியேற்றம் நடந்தது. இதில், கங்கமாம்பாபுரம் மற்றும் பெரிய நாகபூண்டியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை 4:00 மணிக்கு, திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. கோவில் சீரமைப்பு மற்றும் கும்பாபிஷேகத்திற்கான பணிகளை, பெங்களூரைச் சேர்ந்த நரசராஜூ மற்றும் காந்தம்மாள் குடும்பத்தினர் மேற்கொண்டனர். தொடர்ந்து வரும், 31ம் தேதி வரை நடைபெற உள்ள அக்னி வசந்த உற்சவத்தின் நிறைவாக, 30ம் தேதி தீமிதி திருவிழாவும், மறுநாள் பட்டாபிஷேகமும் நடைபெறும்.