புதுச்சேரி: புதுச்சேரி நேரு வீதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யபட்டுள்ளது.புதுச்சேரி நேரு வீதியில் திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் கடந்த 1997ம் ஆண்டு அமைக்கப்பட்டது.இங்கு, திருப்பதி தேவஸ்தானத்தை போன்று அனைத்து பூஜைகளும் நடக்கின்றன. கோவில் கட்டடம் சிதிலமடைந்ததால் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். சாலிகிராமங்களுக்கு விசேஷ பூஜைகள் செய்து உற்சவர் திருப்பதி ஏழுமலையான் சுவாமி, பத்மாவதி தாயார் சிலைகள் எடுத்து வைக்கப்பட்டன.தேவஸ்தான ஆன்மிக சேவகர் சீனிவாச ராகவன் கூறுகையில், கோவில் திருப்பணிக்காக கட்டடம் இடிக்கப்பட உள்ளது.இதனால் உற்சவர், தாயார் சிலைகள் திருப்பதிக்கு கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருப்பதி தேவஸ்தான கமிட்டி முடிவு செய்ய உள்ளது. கோவில் திருப்பணிகள் ஓராண்டு வரை நீடிக்கும். அனைத்து பணிகளும் முடிந்த பிறகு மீண்டும் உற்சவர், தாயார் சுவாமிகள் அருள்பாலிப்பர்என்றார்.