ஆவணி தேய்பிறை அஷ்டமி திதியன்று, மதுரா சிறைச்சாலையில் வசுதேவர், தேவகி தம்பதிக்கு எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் அவதரித்தார். அவரது பிறந்த நாள், கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குழந்தை கிருஷ்ணர் நம்மைத் தேடி வருவதன் அடையாளமாக, சின்னஞ்சிறு பாதத்தை வீட்டு வாசலில் இருந்து பூஜையறை வரை கோலமாக வரைவர். விளக்கேற்றி கிருஷ்ணருக்கு விருப்பமான சீடை, முறுக்கு, அதிரசம், பால், வெண்ணெய், நாவல்பழம், அவல் படைத்து வழிபடுவர். சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடுவர். கிருஷ்ணன் கோவில்களில் உறியடித்தல், வழுக்குமரம் ஏறுதல் போன்ற விளையாட்டுகள் நடக்கும். வட மாநிலங்களில் இந்த விழா ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.