பதிவு செய்த நாள்
15
செப்
2015
10:09
கீழ்நல்லாத்துார் : கீழ்நல்லாத்துாரில் உள்ள, எல்லையம்மன் கோவில் குளத்திற்கு, சுற்றுச்சுவர் கட்டி, கரைகளை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடம்பத்துார் ஒன்றியம், மணவாளநகர் அடுத்துள்ளது கீழ்நல்லாத்துார் ஊராட்சி. இங்குள்ள எல்லையம்மன் கோவில் குளத்தில், 2013 - 14ம் ஆண்டில், 4 லட்சம் ரூபாயில் இருபுற கரைகள் சீரமைக்கப்பட்டன. எஞ்சியுள்ள கரைகளில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாததால், மணல் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து வருகின்றன. மேலும், குளத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், திருவிழா காலங்களில், பக்தர்கள் தவறி விழ வாய்ப்புள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் நிகழும் முன், குளத்தின் இருபுறமுள்ள கரைகளை சீரமைத்து, குளத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்ட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.