புரட்டாசி சனியன்று குழந்தைகளிடம் பேச வேண்டியது என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2015 12:09
புரட்டாசி சனிக்கிழமையன்று குழந்தைகளை கையில் பிடித்துக் கொண்டு கிருஷ்ணர் கோவிலுக்கு போகிறீர்கள். குழந்தை உங்களிடம், அப்பா! கிருஷ்ணர் கோவிலுக்குப் போகிறோமே! கிருஷ்ணா என்பதன் அர்த்தம் என்ன? என்று கேட்கும். உடனே நீங்கள் சொல்ல வேண்டியது இதுதான். கிருஷ்ணா என்ற சொல்லில் உள்ள க்ருஷ் என்றால் பூமி. ணா என்றால் விடுவிப்பவன். தன்னை பக்தியுடன் வணங்குவோரை இந்த பூமியில் இருந்து விடுவித்து சொர்க்கத்தை தருபவன் என்று சொல்ல வேண்டும். அதன்பிறகு, குழந்தை இந்த பூமியில் என்ன கஷ்டம் என்று கேட்கும்.
அதற்கு பதில் சொல்ல நம்மிடம் ஆயிரம் பதில்கள் இருக்கின்றன. அதை புரிகிற மாதிரி எடுத்துச் சொல்லலாம். உடனே குழந்தை, இந்த கஷ்டத்தில் இருந்து விடுபட என்ன செய்யலாம்? என்று கேட்கும். அதற்கு நீங்கள் கிருஷ்ண கிருஷ்ண என்று சொன்னாலே போதும் என சொல்லுங்கள். அதெப்படி? என குழந்தை கேட்கும். அதற்கு நீங்கள், க்ருஷ் என்றால் பூமி. ண என்றால் ஆனந்தம். பூமியில் வாழும் மக்களுக்கு ஆனந்தம் அளிப்பவன் என்றும் ஒரு பொருள் இருக்கிறது. அவன் பெயரைச் சொல்லி எல்லாருக்கும் நல்லதைச் செய்தால் அவன் நம்மை நல்லபடியாக வாழ வைப்பான் என்று சொல்லுங்கள். அவர்கள் தங்கள் சகநண்பர்களிடம் இதைச் சொல்லி, எங்க அப்பா ரொம்ப புத்திசாலி என்று உங்களையும் பாராட்டுவார்கள்.