பதிவு செய்த நாள்
24
செப்
2015
10:09
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், இரண்டாம் பிரகார மாடத்தை, சுத்தம் செய்யும் பணி, துவங்கி நடந்து வருகிறது. காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள, வசந்த மண்டப இரண்டாம் பிரகார மாடம், வாகன மண்டபம் போன்றவை, 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. அவை, தற்போது சிதிலமடைந்து உள்ளதால், அவற்றை புதுப்பிக்க, கடந்த ஜனவரி மாதம், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் துவங்கின. அதில், தற்போது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள, மாடத்தின் மேல் தளம் மற்றும் தரைத் தளம் போன்றவை, சீரமைக்கப் பட்டு வருகின்றன. இந்த மாடத்தில் உள்ள, கல் துாண் போன்றவற்றில் பல ஆண்டுகளுக்கு முன், சுண்ணாம்பு பூசப்பட்டு இருந்தது. அவற்றை அகற்றும் வகையில், தண்ணீர் விட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், அங்கு உள்ள கல் துாண்களின் இயற்கை தன்மை வெளியே தெரியத் துவங்கி உள்ளது. இதுகுறித்து, கோவில் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், இரண்டாம் பிரகார மாடத்தின் உள் பகுதியில், சுண்ணாம்பு பூசப்பட்டு உள்ளது. அப்பகுதிகளில் தண்ணீர் விட்டு, சுண்ணாம்பை அகற்றி வருகிறோம். அடுத்த மாதத்திற்குள் மாடத்தை சீரமைக்கும் பணி முடிந்து விடும் என்றார்.