பதிவு செய்த நாள்
26
செப்
2015
11:09
சைதாப்பேட்டை: காரணீஸ்வரர் கோவில் குளத்தை, பருவ மழை துவங்குவதற்கு முன், துார்வாரி நீரைத்தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சைதாப்பேட்டை குளக்கரை சாலையில் காரணீஸ்வரர் கோவில் அருகே, கோபதிசரஸ் இந்திர தீர்த்தம் திரு க்குளம் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள குளம் சரிவர பராமரிக்கப்படாததால், குப்பை மேடாக காட்சியளிக்கிறது. கழிவுநீர், குப்பை கலப்பால், குளத்து நீரில் துர்நாற்றம் வீசுகிறது. இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்ய, பலர் குளக்கரைக்கு வருகின்றனர். தர்ப்பணம் முடிந்த பின், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை, அங்கு விட்டு செல்கின்றனர். குளக்கரையில் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பை, கழிவுநீர் கலப்பால், குளத்தின் நீர் மாசடையும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது: கோவில் குளத்தில், இரவில் குடிமகன்களில் தொல்லை தாங்க முடியவில்லை. கோவில் குளம், பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் பயனில்லை. விரைவில் நடவடிக்கை அதிகாரிகள் முன் வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.