உத்தர பிரதேசத்தின் மதுரா ஜில்லாவில் பிருந்தாவன் அருகில் உள்ளது கோவர்தன் மலை. கோவர்தன் என்றால் பசுக்களை போஷிக்கும் இடம் எனப் பொருள். இது கிருஷ்ணனின் சிறப்பை மேலும் சிறப்பிக்கிறது. ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் தெய்வங்களைத் திருப்திப் படுத்தாவிட்டால் அவர்கள் தீமை செய்வார்கள் என்ற பயம் இருந்து வந்தது. இந்திரன்... இடி.... மின்னல் மழையின் தெய்வம்! அவனுக்கு ஊர் கூடி பிரம்மாண்ட பூஜை செய்து திருப்திபடுத்தா விட்டால்; அவன் தீமை செய்வான் என நடுங்கினர்.. ஒரு சமயம் இப்படி ஒரு பூஜைக்கு கோவர்தன் பகுதியே தயாராகிக் கொண்டிருந்தபோது குழந்தை கிருஷ்ணன், தன் தந்தை நந்தகோபரிடம், நடப்பது என்ன? எனக் கேட்டுள்ளான். அதற்கு நந்தகோபர், இந்திரனை திருப்திப்படுத்த வேண்டும். இல்லாவிடில் பஞ்சத்தையோ அல்லது கடும் வெள்ளத்தையோ உருவாக்கி ஊரையே நாசம் செய்து விடுவான் எனக் கூறியுள்ளார்.
நாம் நமது கடமையை செய்தால் போதும். யாரையும் திருப்திபடுத்த வேண்டிய அவசியமில்லை எனக் கூறிய கிருஷ்ணன், தைரியமாக ஊரிலுள்ள மக்களிடம் பேசினான். உங்கள் விவசாயம் உங்களைச் சார்ந்த கால்நடைகளை காப்பது தான் உங்கள் கடமையே தவிர, யாரையும் திருப்திபடுத்துவது அல்ல. ஆக இந்த விரயத்தை உடனே நிறுத்துங்கள் எனக் கூறினான். கிருஷ்ணனின் பேச்சில் மயங்கி, உள்ளூர் மக்களும் இந்திர விழா கொண்டாட முயற்சிப்பதை நிறுத்தி விட்டனர்! ஒரு சிறுவனால் இந்திர விழா நடப்பது நின்றதை அறிந்த இந்திரன் கடும் கோபம் கொண்டான். அடுத்த ஏழு நாள் ஏழு இரவுகளுக்கு நந்தி கிராமத்தில் கடும் மழையை உருவாக்கி, மக்களை அழிக்க முயலுகிறான். நிலைமையை முன் கூட்டியே உணர்ந்த கிருஷ்ணன் கோவர்த்தன் மலையையே தூக்கி, குடையாகப் பிடித்து மக்களையும் கால்நடைகளையும் காக்கிறான். இறுதியில் இந்திரன் தன் தோல்வியை ஒப்புக் கொள்வதுடன், கிருஷ்ணன் உண்மையில் யார் என்பதையும் உணருகிறான்... கிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்டு இனி கோவர்த்தன மலைப் பகுதி மக்களுக்குத் துன்பம் தர மாட்டேன் என ஒதுங்குகிறான். ஆக கிருஷ்ணன், மலையைத் தூக்கிய நாளை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.