பதிவு செய்த நாள்
29
செப்
2015
10:09
ராமலிங்கம் நகர்: திருப்பூர் - பல்லடம் ரோடு, ராமலிங்கம் நகர் செல்லும் வழியில், புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ளது, முத்துமாரியம்மன் கோவில். அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து, அம்மன் சிலை வைத்து, வழிபடுகின்றனர். தினமும் காலை, மாலை இருவேளை பூஜை நடக்கிறது. இதுதவிர, வெள்ளிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும், வைகாசி மாதத்தில், சாட்டுவிழா ஏழு நாட்கள் நடைபெறுகிறது. தென்னம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் இருந்து, ஊர் பெண்கள், அம்மனுக்கு மாவிளக்கு, பூச்சட்டி எடுத்து வருகின்றனர். இக்கோவில் வளாகத்திலேயே, விநா யகர், கருப்பண்ணசாமி சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, விசேஷ பூஜை நடைபெறுகிறது. புதிதாக ஒரு செயலை துவங்கும்முன், முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்து, உத்தரவு கேட்டுச்செல்லும் வழக்கம், பக்தர்களிடம் இருக்கு. ஒரு காகிதத்தில் வெள்ளை அரளி, சிவப்பு அரளி பூவை, தனித்தனியாக மடித்துக்கட்டி, அம்மனை வேண்டி, காலடியில் போடுகின்றனர். இரண்டு காகிதங்களில் ஒன்றை எடுப்பர்; பக்தர்கள், மனதில் நினைத்த பூ வந்திருப்பின், அம்மன் உத்தரவு கிடைத்ததாக, மகிழ்ச்சியுடன் அச்செயலை துவங்குகின்றனர்; அம்மன் ஒப்புதல் இல்லையெனில், அச்செயலை சிறிது காலம் தள்ளிப்போடுகின்றனர். வீடு, நிலம், வாகனம் வாங்கும்போதும் அம்மனின் உத்தரவை பெறுகின்றனர்.“குடும்ப கஷ்டம், கணவன்-மனைவி ஒற்றுமை உள்ளிட்ட பல்வேறு பிரார்த்தனைகளுடன், அம்மனை தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்; வேண்டுதல் நிறைவேறியதும், குடும்பத்துடன் வந்து, பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். மார்கழி மாதம், 30 நாட்களும், அதிகாலையில் விசேஷ பூஜை நடக்கிறது; பெண்கள் நலனுக்காக, ஐப்பசி மாதம் அம்மனுக்கு அன்னக்காப்பு அலங்காரம் செய்விக்கப்படுகிறது. நல்ல காரியங்களுக்கு அம்மன் என்றுமே தடை போட்டதில்லை; உடனே, உத்தரவு தருவாள்,” என்கிறார், கோவில் அர்ச்சகர்.
முத்துமாரியம்மன் கோவில்,
ராமலிங்கம் நகர்,
பல்லடம் ரோடு, திருப்பூர்.
தொடர்புக்கு: 99427 90480