பதிவு செய்த நாள்
13
அக்
2015
02:10
சென்னை: புரட்டாசி மாத மஹாளய அமாவாசையையொட்டி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, தங்கள் பிதுர் கடனை செலுத்தினர்.
பெற்றோர்கள் வாழும் காலத்தில், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வது போல,
அவர்களின் வாழ்க்கைக்கு பிறகும் நன்றிக்கடனை தொடர வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
அதற்காக, பிதுர்கடனை ஏற்படுத்தி வைத்து உள்ளனர். புரட்டாசி மாத மஹாளய அமாவாசை
அன்று, முக்கிய புனித தலங்களில் மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து
வழிபடுவர். இந்த நாளில் தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும்; பித்ருக்களின் தோஷம் அகலும் என்பது ஐதீகம்.
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். தெப்பக்குளத்தில் பழம், காய்கறிகள் படையல் வைத்தனர். புரோகிதர் மந்திரம் ஓத, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் வளாகத்தை சுற்றி, தட்சிணா மூர்த்தி கோவில், கோவில் முன் உள்ள மண்டபம் மற்றும் குளக்கரை மண்டபத்தில், நேற்று அதிகாலை முதலே நுாற்றுக்கும் மேற்பட்டோர், வரிசையில் காத்திருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மெரீனா கடற்கரை, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் ஆகிய இடங்களிலும், ஆயிரக்கணக்கான மக்கள், தங்கள் பிதுர் கடனை செலுத்தினர்.