அனைத்தையும் கடந்திருக்கும் மெய்ப்பொருள் என்பது பொருள், புறவுலக நாட்டம் கடந்து, உள்ளத்தின் உள்ளே ஆழ்ந்து செல்லும் உத்தம ஞானிகளுக்கு விளக்கமாகும் தத்துவம் அது. ஒரு குடத்தை சமுத்திரத்தில் போடுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது குடத்துக்குள் நீர் சென்றுவிடுகிறது. குடத்துக்கு வெளியேயும் நீர் இருக்கிறது, குடத்துக்கு உள்ளும் நீர் இருக்கிறது. குடத்துக்குள் நீர் இருப்பதனால் குடம் நீரைத் தாங்கியுள்ளது. குடத்துக்கு வெளியே நீர் இருப்பதனால் நீர் குடத்தைத் தாங்கியுள்ளது. இறைவன் எல்லாவற்றுள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறான். என்பது, குடத்துக்குள் நீர் இருப்பது போன்றது. இறைவன் எல்லாவற்றையும் கடந்து அகண்டமாக இருக்கிறான் என்பது, குடத்துக்கு வெளியே நீர் பரந்திருப்பது போன்றது. அனைத்துள்ளும் உள்ள அவன் அனைத்தையும் கடந்தும் இருக்கிறான். எனவே இயற்கையைக் கடந்தும், இயற்கைக்கு உள்ளேயும் என்றென்றும் நின்றொளிரும் பரம் பொருளைக் கடவுள் என்று வழங்குகிறோம்.