பதிவு செய்த நாள்
26
ஏப்
2026
12:04
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த மூன்று கோலத்தையும் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் உள்ள சுந்தரவரதராஜப் பெருமாள் கோவிலுக்கு சென்றால் பார்க்கலாம். ஆம்..! மூன்று தளங்களில் பெருமாளின் ஒன்பது மூர்த்தங்களையும் ஒன்றாக தரிசிக்கலாம்.
உத்திரமேரூரின் நாயகமாகத் திகழும் சுந்தர வரதராஜப் பெருமாள் கோவில், முன்னர் பல பெயர்களில் அழைக்கப்பட்டது. இதன் மிகவும் தொன்மையான பெயர் ஸ்ரீவேலி விஷ்ணுக்ரஹம் என்பதாகும். கொங்கரையர் நின்ற பெருமாள் கோவில், வெள்ளைமூர்த்தி ஆழ்வார் கோவில், இராஜேந்திர சோழ விண்ணகர், புருஷோத்தமத்துப் பெருமாள் கோவில், பஞ்சவரதர் கோவில் என்றெல்லாம் காலப்போக்கில் இக்கோவில் அழைக்கப்பட்டது.
கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் என மூன்று தளங்களை உடையதாகக் கட்டப்பட்ட கோவில் இது. அதாவது ஒன்றின் மேல் ஒன்றாக மூன்று கர்ப்பக்கிருஹத்தை உடையதாக கட்டப்பட்ட கோவில் இது. இக்கோவிலின் சிறப்பு பெருமாளை வணங்கி அஷ்டாங்க விமானத்தை 12 முறை சுற்றினால் உங்களின் கனவு நனவாகும். மேலும் மூட்டு சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள் ஐந்து வகையான தைலங்களை பெருமாளுக்கு சாத்துகின்றனர். இந்த பிரசாதத்தை பூசினால் மூட்டுவலி குணமாகும்.
திருமாலின் நான்கு வியூகங்கள் பெருமாள் இக்கோவிலில் கிழக்குத் திருமுக மண்டலம், கீழ்தளத்தில் நின்ற திருக்கோலமும், நடுத்தளத்தில் அமர்ந்த திருக்கோலமும், மேல்தளத்தில் சயன திருக்கோலமுமாக விளங்குகிறார். கீழ்தளத்தில், கிழக்கு நோக்கிய கர்ப்பகிருஹத்தைத் தவிர, தெற்கிலும், மேற்கிலும், வடக்கிலுமாக மூன்று கர்ப்பகிருஹங்கள் உள்ளன. ஆக நான்கு திக்குகளிலும், திக்குக்கு ஒன்றாக நான்கு கருவறைகள் உள்ளன. நான்கிலும் நின்ற நிலையில் திருமால் உருவங்கள் உள்ளன.
கிழக்கு நோக்கிய திருமாலை இக்காலத்தில் சுந்தர வரதர் என்றும், தென்மேற்கு நோக்கியதை அச்சுத வரதர் என்றும், மேற்கு நோக்கியதை அநிருத்த வரதர் என்றும், வடக்கு நோக்கியதை கல்யாண வரதர் என்றும் கூறுகின்றனர். இவை நான்கையும் வைணவ மரபில் திருமாலின் நான்கு வியூகங்கள் என்று அழைப்பர். திருமாலின் ஒன்பது மூர்த்தங்கள் நடுத்தளத்தில் கிழக்கு நோக்கி பெருமிதமாக அமர்ந்திருக்கும் பெருமான் வைகுந்த வரதர் என அழைக்கப்படுகிறார்.
இது தவிர, இத்தளத்திலும் தெற்கு, மேற்கு, வடக்கு என திக்குக்கு ஒன்றாக கருவறைகள் உள்ளன. தெற்கு அர்ச்சுணனும் நோக்கிய கருவறையில் கிருஷ்ணனும் அர்ஜுனனும் அமர்ந்து நரநாராயணர்களாக விளங்குகின்றனர். மேற்கு நோக்கி நரசிம்ம பெருமானும், வடக்கு நோக்கி பூவராக மூர்த்தியும் அமர்ந்து விளங்குகின்றனர். திருமால் கோலங்கள்; மேல் தளத்தில் அனந்தசயனம் கொண்டாராக திருமால் படுத்த திருக்கோலமுமாக கீழ்தளத்தில் நான்கு, நடுத்தளத்தில் நான்கு, மேல் தளத்தில் ஒன்று என மொத்தம் திருமாலின் ஒன்பது மூர்த்தங்கள் உள்ளன.
ஒன்பது மூர்த்தங்கள் உள்ளதை நவமூர்த்தி பிரதிஷ்டை என அழைப்பர். இக்கோவிலில் வைணவ மரபில் வைகானஸப் பிரிவில் மரீசி சம்ஹிதை என்ற நுாலைப் பின்பற்றி வழிபாடு நடைபெறுகிறது. இந்த அமைப்புத் தவிர கீழ்தளத்தில் தெற்கு, மேற்கு. வடக்கு திக்குகளில் உள்ள கருவறைக்கு ஏறிச் செல்லப் படிகள் உள்ளன. அவற்றிக்கு கைப்பிடிச் சுவர்கள் உள்ளன. தெற்கு கைப்பிடிச் சுவரில் சரஸ்வதியின் உருவம் உள்ளது.
இவ்வுருவம் ஒரு சிறப்புடையது. இதைப் பார்த்தால் கஜலக்ஷ்மி போல் இருக்கும். இரண்டு புறங்களில் யானைகள் நின்று இத்தேவியின் மீது கலசங்களால் அபிஷேகம் செய்வது போல் இருக்கிறது. இது மேலெழுந்த வாரியாக பார்த்தால் கஜலக்ஷ்மி என்று கூறிவிடுவோம். ஆனால் இத்தேவியின் மேலிரு கரங்களில் கலசமும் அக்கமாலையும் உள்ளன. இடது கரத்தில் புத்தகம் இருக்கிறது. வலது கரம் அபய ஹஸ்தமாகக் காணப்படுகிறது. இது சரஸ்வதியின் சிலை என்பதில் ஐயமில்லை.
ஆனந்த வாழ்வு தரும் ஸ்ரீஆனந்தவல்லி தாயார்:
மரீசி சம்ஹிதை இந்த இடத்தில் சரஸ்வதி இருக்க வேண்டும் என்று கூறுகிறது. சரஸ்வதியை வாக்தேவி என்று அந்நூல் குறிக்கிறது. மேற்குப்புறப் படிச் சுவற்றில் இரதியும் மன்மதனும் நிற்கின்றனர். மன்மதன் எனக் காட்ட அவனுக்கருகில் மகரக் கொடி உள்ளது. மறுபுறம் கரும்பு வில்லும் மலர்களால் ஆன ஐங்கணைகளும் உள்ளன. வடபுறப் படிக்கட்டின் கைச்சுவற்றில் பிருகு மகரிஷி அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். இக்கோவிலில் உள்ள ஒவ்வொரு அமைப்பும் மரீசி சம்ஹிதையில் கூறியுள்ளபடியே உள்ளன. இதன் விமானத்தில் தென்புறம், தக்ஷிணாமூர்த்தி, சந்திரசேகரர், உமா மகேசுரர், துர்க்கை, கணபதி ஆகிய சைவ உருவங்கள் உள்ளன. பிற திசைகளில் திருமால் கோலங்கள் உள்ளன. இக்கோயிலின் முன் மண்டபம் பிராகாரம் முதலியவை மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டன.
எட்டாம் நுற்றாண்டின் சிறப்பு;
எட்டாம் நூற்றாண்டில் முதன் முதலில் இக்கோவில் கட்டப்பட்ட போது, இதன் அடிப்பகுதி மட்டும் கருங்கல்லால் கட்டப்பட்டது. மேல் பகுதி முழுதும் செங்கல்லால் கட்டப்பட்டது. அடிப்பகுதியான கருங்கல்லில்தான் கல்வெட்டுகள் எல்லாம் பொறிக்கப்பட்டுள்ளன. அதில், உள்ள பழமையான கல்வெட்டு சம்ஸ்கிருத மொழியில் பல்லவ கிரந்த எழுத்துகளில் உள்ளது.
இக்கோவிலை காஞ்சிபுரத்துப் பாடகம் என்னும் ஊரில் வாழ்ந்த பரமேசுவரன் என்ற தச்சன் கட்டினான். அவன் நல்ல அறிவாளி. வாய்மையே தலையாய் நின்றவன். அவனால் இப்பெருங்கோவில் கட்டப்பட்டது. இதன் அளவுகளையும், அங்கங்களையும் அணிகளையும் எவன் ஒருவன் அறிகிறானோ அவனே வாஸ்து வித்தையில் சிறந்தவன்.
இவ்வாஸ்து மிகவும் மகோன்னதமானது. பெயராலும், வகையாலும் மிகச் சிறந்தது. வாஸ்துக்களில் எல்லாம் சூரியனைப் போன்றது. இவ்வூரில் ஆகம வல்லுநர்கள் பலர் இருக்கின்றனர். அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என அனுபவம் மிக்கவர்கள் உள்ளனர். அவர்கள் அறிவுரைப்படி இக்கோவில் கட்டப்பட்டது என, அக்கல்வெட்டுக் கூறுகிறது. இதிலிருந்து இக்கோவிலை எட்டாம் நுற்றாண்டில் மிகச் சிறந்த கோவிலாகக் கட்டியிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.
பத்தாம் நுாற்றாண்டின் பணி;
இக்கோவிலில் திருமாலின் ஒன்பது மூர்த்தங்கள் உள்ளன என்றும், இது மரீசி ஸம்ஹிதை என்னும் வைணவ நுால்படி கட்டப்பட்டது என்றும் கண்டோம். அந்நூலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறையோர்கள் வசிக்கும் ஊர்களில் நவமூர்த்தி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. இவ்வூர் 1,200 மறையோர்களுக்கு நந்திவர்மனால் தானம் அளிக்கப்பட்டது என்று கண்டோம். இவ்வூரில் பலர் ஆயிரத்து இருநுாற்றுவர் எனப் பெயர் கொண்டிருந்ததை கல்வெட்டுகள் காட்டுகின்றன. இதனால், இக்கோவில் தோற்றுவித்த காலத்திலேயே மரீசி ஸம்ஹிதையைப் பின்பற்றி கட்டியிருக்கிறார்கள் அறியலாம். இதன் பின்னர் பல்லவன் நந்திவர்மனின் கல்வெட்டு முழுமையாக எழுதப்படாமல் நின்றுவிட்டது.
10ம் நுாற்றாண்டில் கொங்கரையர் என்பவனால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆதலின் இக்கோயில் கொங்கரையர் ஸ்ரீ கோவில் என்றும் பெயர் காணப்படுகிறது. கோவில் அதிட்டானத்தில் கொங்கரையர் நின்ற பெருமாள் என்ற பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இத்திருப்பணி செய்யப்பட்டபோது கோவிலின் பண்டைய அமைப்பை எவ்விதத்திலும் மாற்றாமல் பணி செய்துள்ளது போற்றத்தக்க ஒன்றாகும். பார்த்திவேந்திர வர்மனின் ஒரு கல்வெட்டில் கொங்கரையர் எடுப்பித்த ஸ்ரீவேலி விஷ்ணுக்ருஹம் என்ற குறிப்பு காணப்படுகிறது. இது பத்தாம் நுாற்றாண்டில் நடைபெற்ற திருப்பணி.
நிலம், ஆடுகள் தானம்;
இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் இக்கோவிலில் பல காணப்படுகின்றன. இவற்றில் கொங்கரையர் கோவில் என்றும், கொங்கரையர் கோவிலான ஸ்ரீவேலி விஷ்ணுக்ருஹம் என்றும் புருஷோத்தமம் என்றும் பெயர்கள் காணப்படுகின்றன. 1002ம் ஆண்டில் ராஜராஜன் காலத்தில் கொங்கரையர் ஸ்ரீ கோவிலில் நின்ற பரமசுவாமிகளுக்கு விளக்கெரிக்க 96 ஆடுகள் தானம் அளிக்கப்பட்டன.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு புருஷோத்தமத்து பெருமானுக்கு நைவேத்யத்துக்காக ஒரு நிலம் கொடுக்கப்பட்டது. மேலும் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு திரிவிக்ரமச் சேரியில் வாழ்ந்த ஒரு பெண்மணி ஸ்ரீவேலி விஷ்ணுகிருஹத்து வெள்ளைமூர்த்தி பெருமானுக்கு விளக்கெரிக்க 96 ஆடுகள் கொடுத்தாள். இதேபோல ஹ்ரீஷீகேசச் சேரியை சேர்ந்த ஒருவர், ஸ்ரீவேலி விஷ்ணுக்ருஹத்தில் எழுந்தருளி நின்ற ஸ்ரீராகவப் பெருமானுக்கு விளக்கெரிக்க 96 ஆடுகள் கொடுத்தார். இதே சோழ மன்னன் காலத்தில் கி.பி.1031ல் இவ்வூரில் 2240 குழி நிலம் தரிசாக இருந்தது.
இவற்றை வரி ஏதுமில்லாமல் கோவிலுக்கே கொடுத்து விட்டனர். இந்நிலங்களைத் திருத்தி இவற்றின் வருவாயைக் கொண்டு கோவிலின் மூன்று சன்னிதிகளில் பூஜைக்கும், நான்கு அயனங்களில் சிறப்பு வழிபாட்டுக்கும், கிரஹண காலங்களில் சிறப்பு வழிபாடுகளுக்கும் பயன்படுத்த வேண்டும். மேலும் இக்கோவிலில் மேல் தளத்தில் உள்ள அனந்தசயனப் பெருமாளுக்கு பூஜைக்கும் விளக்குக்கும் பயன்படுத்த வேண்டும்.
ஒரு ராஜேந்திர சோழனின் ஆட்சியில் 1042, இக்கோவிலுக்கு ஒரு நந்தவனம் அமைக்கவும் குந்தவை ஆழ்வார் பெயரில் மடம் ஏற்படுத்தவும் அம்மடத்தில் ஸ்ரீ வைணவர்களுக்கு உணவு அளிக்கவும் நிலம் கொடுக்கப்பட்டது. கோவில்களை ஒட்டி மடம் அமைத்து அதில் வைணவர்களுக்க்கு உணவளிப்பது தொன்று தொட்டு வரும் ஒரு மரபாகும்.
1038ல் ராஜேந்திரனின் ஆட்சியில் ஊர்ச்சபையார் இக்கோவிலுக்கு நிலமளித்தார். அந்நிலத்தின் வருவாய் கொண்டு இரண்டு பணிகள் செய்ய பணித்தனர். ஒன்று நாள்தோறும் இக்கோவிலில் மூவர் திருவாய்மொழி விண்ணப்பம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
அதே போல நாள்தோறும் வாஜஸனேய வேதம் ஓதவும் ஏற்பாடாயிற்று. இதிலிருந்து திருவாய்மொழி ஓதவும், வேதம் ஓதவும் இரண்டு மகா நிலம் அளித்துள்ளது. வேதத்தையும் திருவாய்மொழியையும் சமமாக பாவித்தனர் என அறிய முடிகிறது.
இக்கோவிலில் உள்ள முதலாம் குலோத்துங்க சோழனின் காலச் சான்றும் சிறப்பு மிக்கதே, சோழவிச்சாதர பல்லவரையன் என்பவன் இவ்வூரில் 30 பாடகம் நிலம் வாங்கினான். இந்நிலம் 60 -70 ஆண்டுகளாக விளைச்சலின்றி தரிசாகக் கிடந்தது.
கோவிலை ஒட்டி ஒரு மடம் அமைத்து அதன் செலவுகளுக்காக கொடுத்தான். அத்துடன் திருமழிசை வள்ளல் என்பவரும் வீற்றிருந்தான் தாசன் என்பவரும் பணம் கொடுத்தனர். அவர்களது பணம் கொண்டு ஒரு மனை வாங்கப்பட்டது. இதில் அருளாளாசன் மடம் என்று ஒரு மடம் வைக்கப்பட்டது.
அந்நிலத்தின் வருவாயைக் கொண்டு இம்மடத்தை நடத்த ஏற்பாடாயிற்று. அந்நிலத்துக்கு வாங்கி அளித்தவர் பெயரால் சோழ விச்சாதர விளாகம் எனப் பெயர் வைக்கப்பட்டது. அந்நிலத்துக்கு நிலம் வாங்கிய ஆண்டு வரி விலக்கும் கொடுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஐந்து காசு வரிகட்ட வேண்டும். நிலத்தைப் பண்படுத்த முதலாண்டு வரி விலக்களித்து, ஊக்கமளித்து அடுத்த ஆண்டு முதல் வரிவிதிக்கும் முறை, அக்காலத்து வேளாண் வரலாற்றை அறிய முடிகிறது.
ஆயிரத்து இருநுாற்று மாணிக்கம்;
மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சியில் இரண்டு செய்திகள் இங்கு இடம் பெற்றுள்ளன. 38வது வருடம் இக்கோவிலில் நாட்டியமாடும் ஒரு பெண் ஆயிரத்து இருநுாற்று மாணிக்கம் என்பது அவளது பெயர். அவள் இக்கோவிலின் பிரகாரத்தையும் முன் மண்டபத்தையும் பிற சில கட்டடங்களையும் கட்டினான். அவளது பணியையும் பக்தியையும் பாராட்டி, ஊரார் கோவில் தானத்தாரின் அனுமதியுடன் தினந்தோறும் பெருமாளுக்கு படைக்கப்படும் நைவேத்யத்திலிருந்து ஒரு குறுணி, திருவமுதை, இவளுக்கும் இவள் வம்சத்தாருக்கும் அளிக்க ஏற்பாடு செய்தனர்.
நாட்டியப் பெண்கள் கோவில்களுக்கு எவ்வளவு திருப்பணி செய்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு இவனுக்கு அடுத்து வந்த மூன்றாம் ராஜராஜனது காலத்தில் இப்பெண் இக்கோயிலுக்கு மேலும் சில திருப்பணிகள் செய்தாள். அதையும் மெச்சி ஊரார் இவளுக்கு சில சலுகைகளை அளித்தனர்.
சொக்கப் பெருமாள் பெயர் காரணம்;
விக்ரம சோழனின் 11ம் ஆண்டில், ஆடி மாதம் தோறும் வெள்ளைமூர்த்தி ஆழ்வாரின் திருவிழாவில் சொக்கப் பெருமாள் வரும்போது அபிஷேகத்துக்கும் அமுதுபடி உலா சாத்து படிகளுக்கும், அழகிய தேவன் என்பவன் நிலம் அளித்தான்.
இக்கல்வெட்டில், வெள்ளைமூர்த்தி ஆழ்வார் கோவிலில் திருவிழா எழுந்தருளும் சொக்கப்பெருமாள் என்பதால் வெள்ளைமூர்த்தி ஆழ்வார் என்பது மூலவர் பெயராகவும், சொக்கர் என்பது உத்சவர் பெயராகவும் காணப்பெறுகின்றன.
மதுரையில் சொக்கநாதர் என்பது சுந்தரேசுரர் என அழைக்கப்படுவது நாம் அறிந்ததே..!
அது போல சொக்கப் பெருமாள் என்பதே சுந்தரவரதர் எனும் பெயரின் பிரதிபலிப்பு எனலாம். பின்னர், வந்த பிற்கால பாண்டியன் வீரபாண்டியன் என காலத்தில், இக்கோயில் சொக்கப் பெருமாள் கோவில் அழைக்கப்பட்டது. சொக்கப்பெருமாள் கோவிலைச் சுற்றி வசிக்கும் வணிகர்கள், கேதாரீசுரர், கோவிலைச் சுற்றி வசிக்கும் வணிகர்களைப் போல செக்குகளுக்கும், எண்ணைக்கும் இனி வரி செலுத்த வேண்டியதில்லை என உத்தரவு இடப்பட்டது.
12ம் நுாற்றாண்டிலிருந்து கோவில் சொக்கப்பெருமாள் கோயில் என மக்கள் வழக்கில் வந்துள்ளமை காணலாம்.