மேட்டுப்பாளையம்: காரமடை அருகே குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காரமடையை அடுத்த குருந்தமலையில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. கடந்த, 12ம் தேதி கந்தர் சஷ்டி விழா துவங்கியது. ஐந்து நாட்களுக்கு அலங்கார அபிஷேக பூஜையும், தீபாராதனையும் நடந்தது. 17ம் தேதி மாலை சூரசம்ஹார விழாவும், 18ம் தேதி மதியம், 1.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. குழந்தை வேலாயுதசுவாமி மற்றும் வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகளை அலங்காரம் செய்து வைத்தனர். ஜெயபால சுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமையில், ஹோமம் வளர்த்து, வேதமந்திரங்கள் முழங்க, குருக்கள் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தினர்.பின், வள்ளி, தெய்வானைக்கு திருமாங்கல்யத்தை அணிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு மாங்கல்ய கயிறும், பிரசாதமும் வழங்கப்பட்டது.