பதிவு செய்த நாள்
03
டிச
2015
11:12
நாமக்கல்: வரும், 2016ல், தினசரி அபி?ஷகத்துக்கு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் முன்பதிவு முடிவுக்கு வந்த நிலையில், விடுமுறை நாட்களில் அபிஷேகம் உள்ளிட்டவை செய்ய, முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஸ்வாமி, 18 அடி உயரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஸ்வாமிக்கு தினமும் அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. முக்கிய விசேஷ நாளில், தமிழகம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து ஸ்வாமியை வழிபட்டுச் செல்கின்றனர். அதன்படி, காலையில் நடை திறக்கப்பட்டு, 1,008 வடமாலை சாத்தப்படும்.
தொடர்ந்து, எண்ணெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், தேன், பன்னீர் போன்ற பலவகை பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன், ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வதற்கான செலவை, ஒரு பக்தர் மட்டுமே ஏற்று நடத்தி வந்தார். அதனால், மற்ற பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவற்றை தவிர்க்க, மூன்று பேர் அபிஷேக செலவை ஏற்கும் வகையில், கோவில் நிர்வாகம் மாற்றி அமைத்தது. அதன்படி, தினமும் அபிஷேகத்துக்கு, தேவஸ்தான கட்டணம், பூஜை பொருட்கள் ஆகியவற்குக்கு சேர்த்து, கட்டளைதாரரிடம் வசூல் செய்யப்படுகிறது. ஆண்டு தோறும், நவம்பர், டிசம்பர் மாதங்களில், முன் பதிவு துவங்கப்படும். வரும், 2016ம் ஆண்டுக்கான முன் பதிவு கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது. அதன்படி, சனி, ஞாயிறு, அமாவாசை, பவுர்ணமி, மூலம் நட்சத்திரம் உள்ளிட்ட முக்கிய விஷேச நாளில், அபிஷேக ஆராதனை செய்வதற்கான முன்பதிவு முடிந்துவிட்டது. மேற்கண்ட நாட்கள் அல்லாது, மற்ற நாட்களில் பூஜை செய்ய முன்பதிவு செய்து கொள்ள தேதிகள் உள்ளன என்று, கோவில் நிர்வாகிகள் தரப்பில் கூறுகின்றனர்.