பதிவு செய்த நாள்
03
டிச
2015
10:12
திண்டுக்கல்: பழநி பஞ்சாமிர்தம் தயாரிப்பில் சிறுமலை வாழைப் பழத்தை சேர்க்காததால், விரைவில் கெட்டுவிடுவதாக பக்தர் ஒருவர் திண்டுக்கல் கலெக்டர் ஹரிஹரனிடம் புகார் அளித்தார். டாக்டர் அப்துல்கலாம் நினைவு அறக்கட்டளை இயக்குனர் நாகராஜன் அளித்த புகார் மனு: பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்தத்தை, வெளிமாநில, வெளிநாட்டு பக்தர்கள் வாங்கி செல்கின்றனர். இதில் முன்பு சிறுமலை வாழைப் பழம், நாட்டு சர்க்கரை, பச்சை கற்பூரம், கற்கண்டு, பேரீச்சம் பழம், நெய், ஏலக்காய் சேர்க்கப்படும். இப்பஞ்சாமிர்தம் பல நாட்களானாலும் கெட்டு போகாமல், நல்ல என வாசனையோடும், சுவையோடு இருக்கும். தற்போது கோயில் நிர்வாகம் பஞ்சாமிர்த தயாரிப்பில் சிறுமலை வாழைப் பழத்தை சேர்ப்பதில்லை. இதற்கு பதிலாக பூவன் பழத்தை சேர்க்கின்றனர். பூவன் பழத்தால் பஞ்சாமிர்தம் விரைவில் கெட்டுப் போகிறது. சிறுமலை வாழைப் பழத்தை மீண்டும் பஞ்சாமிர்தத்தில் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கற்பூர வல்லியாவது சேர்க்க ஆவண நடவடிக்கையை எடுக்க வேண்டும், என்றார். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தாசில்தார் மாரியப்பனுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.