பதிவு செய்த நாள்
12
டிச
2015
09:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து உற்சவம், நேற்று காலை துவங்கியது. நம்பெருமாள் மூல ஸ்தானத்தில் இருந்து, நீள் முடி கிரீடம் அலங்காரத்தில் புறப்பட்டு, அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர் களுக்கு சேவை சாதித்தார்.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நேற்று முன்தினம், திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, பகல் பத்து உற்சவம் நேற்று காலை துவங்கியது.முதல் நாளான நேற்று, நம் பெருமாள் புறப்பாடு நடந்தது. மூலஸ்தானத்தில் இருந்து சிம்மகதியில், காலை, 7:00 மணிக்கு, தங்கப் பல்லக்கில் புறப்பட்டார். நீள் முடி கிரீடம், விமானப் பதக்கம், வைர அபயகஸ்தம், தங்கக்காசு மாலை, 18 ஆர முத்தாரம் உட்பட பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து, ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன் பகல் பத்து மண்டபமான, அர்ச்சுன மண்டபத்துக்கு காலை, 7:45 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாள் முன் அரையர்கள், திருப்பல்லாண்டு பாசுரங்களை பாடினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். நம்பெருமாள் இரவு, 10:00 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நம்பெருமாள் மோகினி அலங்காரம், வரும், 20ம் தேதியும், பரமபதவாசல் நிகழ்ச்சி, 21ம் தேதியும் நடை பெறுகிறது.