பதிவு செய்த நாள்
12
டிச
2015
10:12
பாரதத்தின் மிகப்பெரும் இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக கூறப்படுகிறது. இந்த இதிகாசம் கதைக்குள், கதை சொல்லும் அமைப்பை உடையது. கோவை குறிச்சியில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் அரவான் திருவிழா, மகாபாரத கிளை கதை ஒன்றின் பின்னணியை கொண்டது. கவுரவர்கள் – பாண்டவர்கள் இடையே, ௧௮ நாட்கள் நடக்கும் குருஷேத்திர போரின் துவக்கமாக, சர்வ லட்சணமும் கொண்ட வீரன் ஒருவரை பலி கொடுக்கும் நிகழ்ச்சியே, அரவான் திருவிழா. அதன்படி, அர்ஜுனன் – நாக இளவரசி உலுப்பியின் மகனான, ௩௨ லட்சணங்களும் கொண்ட அரவானை பலி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. முன்னதாக அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. திருமணம் முடிந்து, மூன்று நாட்களுக்கு பின், அரவான் களப்பலி கொடுக்கப்பட்டார். இந்நிகழ்வில் ௧௮ சமூக மக்கள் பங்கேற்றனர்.
சமுதாய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடந்த குறிச்சி அரவான் திருவிழா, களப்பலியுடன் நேற்று நிறைவடைந்தது. விழா டிச., 1ல், குறிச்சி முதுப்பர் கோவிலில் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து ஊர் எல்லை கட்டுதல், அரவானுக்கு உயிர் பிடித்தல், கம்பம் நட்டு பூச்சாட்டுதல் ஆகிய வை நடந்தன. தொடர்ந்து, 7ம் தேதி வரை, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த, 8ம் தேதி இரவு, பெருமாள் கோவிலில் அரவான், அனுமார் சுவாமிகள் கட்டுதல் நடந்தது. நேற்று முன்தினம் காலை அரவான் அலங்கரிக்கப்பட்டு, உருமால் கட்டும் சீர் முடிந்து, பெருமாள் கோவிலிலிருந்து எழுந்தருளுதல் நடந்தது. தொடர்ச்சியாக, அரவான் குறிச்சி குளக்கரை விநாயகர் கோவிலில் தீர்த்தமாடி, சிறப்பு வழிபாட்டுடன் புறப்படுதல் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, அரவான் கோவிலில், அரவான், பொங்கியம்மன் திருமண விழா துவங்கியது. பல்வேறு சமூகத்தார், மாவிளக்கு வழிபாடு நடத்தினர். இதையடுத்து, திருமண உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் மாலையில், குளக்கரை கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று காலை, அரவான் திருவீதி உலா துவங்கியது. மாலை, 5:00 மணியளவில், சுந்தராபுரம் அரவான் திடலை வந்தடைந்த அரவான் மற்றும் பொங்கியம்மனை திரளானோர், வழிபட்டனர். பின்னர் களப்பலி மேடைக்கு செல்லும் வழியில், பெருமாள் கோவிலில், தேவர் சமூகத்தார் சார்பில், அரவானுக்கு கிருஷ்ணர் மாலையிட்டு, வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. காந்திஜி ரோட்டிலுள்ள தேவேந்திர குல வேளாளர் சமூக மேடையில் அரவான் களப்பலியுடன், விழா நிறைவடைந்தது. திரளான பக்தர்கள் பயபக்தியுடன் பங்கேற்றனர்.