சபரிமலை: முற்பகல் 11 மணி நேரமும், பிற்பகல் ஏழு மணி நேரமும் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் நடத்தலாம். ஆறு மணி நேரம் மட்டுமே நடை அடைத்திருக்கும். சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக கூடுதல் நேரம் தரிசன வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி அதிகாலை மூன்று மணிக்கு திறக்கும் நடை மதியம் இரண்டு மணி வரை திறந்திருக்கும். இதன் மூலம் முற்பகலில் 11 மணி நேரம் தொடர்ச்சியாக பக்தர்கள் தரிசனம் நடத்த முடியும். இந்த கால அளவில் சுமார் ஒன்பதரை மணி நேரம் நெய்யபிஷேகம் நடைபெறும். அதிகாலை 3.15-க்கு தொடங்கும் நெய்யபிஷேகம் 12.45 வரை நடைபெறும். உச்சபூஜை முடிந்து இரண்டு மணிக்கு நடை அடைக்கப்படும்.அதன் பின்னர் மாலை நான்கு மணிக்கு நடை திறந்தால் இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் நடத்தலாம். கூட்டம் மிக அதிகமாக இருந்தால் ஒரு மணி நேரம் முன்னதாக மாலை மூன்று மணிக்கு திறந்து, இரவு 11.30 வரை திறந்திருக்கும். இதன் மூலம் ஒரு நாளில் 18 மணி நேரமும், மிக அதிகமான கூட்டம் உள்ள நாட்களில் 19.5 மணி நேரமும் தரிசனம் கிடைக்கும்.