மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து உற்சவம் துவங்கியது. கோவை மாவட்டத்தில், காரமடை அரங்கநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற வைஷ்ணவ ஸ்தலம். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கோவிலில் பகல் பத்து உற்சவம் நிகழ்ச்சி துவங்கியது. ரங்க மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருக்கும், அரங்கநாத பெருமாள் முன்னிலையில், ஸ்தலத்தார்கள் நல்லான் சக்ரவர்த்தி, வேதவியாச பட்டர், சுதர்சன பட்டர் ஆகியோர் திவ்யபிரபந்த பாசுரங்களை சேவித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சி வரும், 20ம் தேதி வரை நடைபெறும். 21ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடைபெற உள்ளது. தொடர்ந்து, அன்று இரவிலிருந்து ராபத்து உற்சவம் துவங்குகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கைலாஷ் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.