பதிவு செய்த நாள்
01
ஜன
2016
11:01
காரமடை கோவிலில் வைகுண்ட ஏகாதசி நிறைவை அடுத்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதப் பெருமாள், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ராப்பத்து உற்சவம் பத்து நாட்கள் நடந்தன. இதன் நிறைவு விழாவில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில், சொர்க்க வாசல் முன், எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜை செய்த பின், சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின், கோவில் உள்பிரகாரத்தில் இளைப்பாறு மண்டபத்தில் சுவாமியை வைத்தனர். அங்கு ஸ்தலத்தார் நல்லான் சக்ரவர்த்தி, வேதவியாசர் சுதர்சன பட்டர், ஸ்ரீதர் பட்டர் ஆகியோர் பாசுரங்களை பாடினர். அதன் பின் திருமஞ்சனமும், ராமானுஜ நுாற்று அந்தாதி பூஜையும், திருவாய் மொழித் திருநாள் சாற்றுமுறையும் நடந்தது.