2016ம் ஆண்டின் கூட்டுத்தொகை ஒன்பது. இந்த எண்ணுக்குரிய கிரகம் செவ்வாய். இந்த கிரகத்தின் அதிபதியான முருகனை ஆங்கில புத்தாண்டில் வழிபட வேண்டும். அதிலும் மலையில் குடியிருக்கும் முருகன் என்றால் மிகவும் சிறப்பு. இந்த முருகன் திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மலையில் அருள்புரிகிறார். வத்தலக்குண்டில் இருந்து 45 கி.மீ., தூரத்திலுள்ளது இவ்வூர். இங்குள்ள பால முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் ஆனந்தமான வாழ்வு அமையும். தல வரலாறு: முருகப்பெருமான் ஆறாவது படைவீடான சோலைமலையில் தங்கியிருந்த பின், தாண்டிக்குடிக்கு எழுந்தருளினார். அகத்தியரின் சீடரான இடும்பன் கைலாயத்திலிருந்து சிவகிரி, சக்திகிரி என் இரண்டு மலைகளை சுமந்து கொண்டு வருவதை அறிந்து, அந்த மலைகளில் ஒன்றைத் தன் இருப்பிடமாக்கிக் கொள்ள இங்கிருந்து தாண்டிக் குதித்தார். இதன் காரணமாக இந்த தலம் தாண்டிக் குதி என்று அழைக்கப்பட்டது. காலப்÷ பாக்கில் தாண்டிக்குடி என மாறியது.
பன்றிமலை சுவாமி: பத்தொன்பதாம் சித்தர் என போற்றப்படும் பன்றிமலை சுவாமிகள் ஜோதி வடிவில் முருகனை இங்கு வழிபட்டு வந்தார். அதன் அடையாளமாக முருகனின் திருவடி இங்குள்ள மண்ணில் பதிந்த அடையாளம் இங்குள்ளது. ஜோதி வடிவான பன்றிமலை சுவாமியின் பெயரால் இவ்வூர் ஜோதிமலை என்றும் அழைக்கப்படுகிறது. அவரது வேண்டுகோளின்படி கோவில் கட்ட தேவையான பணம் பெறுவதற்கு பக்தர்களின் கனவில் முருகனே கட்டளையிட்டு திருப்பணி நடத்தப்பட்டது. சிறப்பம்சம்: பழநியைப் போலவே இங்கும் முருகன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கணபதி, மயில், இடும்பன், பைரவர், அகத்தியர், நவக்கிரகங்களுடன் அமைந்துள்ள இக்கோவிலில் 1949 ல் கும்பாபிஷேகம் நடந்தது. தாண்டிக்குடி முருகனைத் தரிசித்த பின் பழநிக்குச் சென்றால் முழு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். பாறை ஒன்றில் வற்றாத தீர்த்தம் சுரக்கிறது. கோவிலில் இருந்து 75 அடி தூரத்தில் மண்மேட்டில் கிடைக்கும் மண்ணே விபூதியாக தரப்படுகிறது.