கீழே இறங்கி வருதல் என்பது, அவதாரம் என்ற சொல்லின் நேரடியான பொருள். இறைவன் எல்லைகளைக் கடந்தவன், காலத்தைக் கடந்தவன். எல்லைகளையும் காலத்தையும் கடந்த பரம்பொருள், எல்லைகளுக்குள்ளும் காலத்திற்குள்ளும் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு உட்படுத்திக்கொண்டும் மனிதனாகப் பிறக்கிறது. இறைவன் தனக்கு உரிய பரத்துவ நிலையை விட்டிறங்கி, மனித குலத்தை உய்விக்கும் பொருட்டுச் சுலபனாக மனித வடிவத்தில் வருகிறான்; மனிதகுலத்திற்கு அறவழியைக் காட்டி, அவர்களைக் கடைத்தேற்றிக் காப்பாற்றுகிறான். இறைவனின் இந் தச் செயலே அவன் தயைகசிந்து (தயை என்ற பெருங்கடல்), கருணையின் இமயம் என்பதை நமக்கு உணர்த்துகிறது.