பதிவு செய்த நாள்
10
ஆக
2011
11:08
பள்ளிப்பட்டு : வெள்ளாத்தூர் அம்மன் கோவில், 5ம் ஆண்டு பால்குட அபிஷேகம் மற்றும் ஆடிபொங்கல்விழா கோலாகலமாக நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்தூர் கிராமத்தில் உள்ளது வெள்ளாத்தூர் அம்மன் கோவில். இக்கோவிலில், 5ம் ஆண்டு பால் குட அபிஷேக விழாவை ஒட்டி, காலை 11 மணிக்கு கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலிலிருந்து, 108 பால் குடங்களை பெண்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்றனர். முக்கிய தெருக்கள் வழியாக சென்ற இந்த பால் குட ஊர்வலம், கோவில் வளாகத்தை அடைந்து, கோவிலை வலம் வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.
இதில் அம்மையார்குப்பம், வெங்கனூர், சொரக்காய்பேட்டை மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சத்திர வாடா, ஏகாம்பரகுப்பம், புத்தூர், நாராயணவனம் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு, கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏந்தி அம்மனை வழிபட்டனர். செங்குந்தர் குல வெள்ளாத்தூர் மரபினர் சங்கத் தலைவர் துளசிராம் மற்றும் உறுப்பினர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.