பதிவு செய்த நாள்
18
ஜன
2016
12:01
நாமக்கல்: தை முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, ஆஞ்சநேயர் சுவாமிக்கு நடந்த சிறப்பு அபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். நாமக்கல் நகரின் மையத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தமிழகம் மட்டும் அல்லாமல், பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து, சுவாமியை வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒவ்வொரு விசேஷ தினத்தன்று, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன்படி, நேற்று, தை முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, காலை, 10 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஆஞ்சநேயர் சுவாமிக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில், நாமக்கல் மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பங்கேற்று சுவாமியை வழிபட்டுச் சென்றனர். பக்தர்களுக்கு, நீர் மோர் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.