பதிவு செய்த நாள்
18
ஜன
2016
12:01
பழநி: பாதயாத்திரைக்கு புகழ்பெற்ற பழநி தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், செய்யப்பட்டு காலை 9மணிக்கு மேல் 10.30மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் ஆறாம் நாள் ஜன.,23ல் ஸ்கந்த ஹோமத்துடன் இரவு 7.30 மணிக்கு மேல், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி திருவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தேரோட்டம்: விழாவின் ஏழாம் நாள், ஜன.,24ல் தைப்பூசத்தை முன்னிட்டு, மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை சண்முகநதிக்கரையில் உள்ள தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வர். காலை 11 மணிக்கு சுவாமி தேர்ஏற்றம் செய்யப்பட்டு, மாலை 4.25 மணிக்கு தேரடி தேர்நிலையிலிருந்து தேரோட்டம் துவங்கி, நான்கு ரத வீதிகளில் தேர் வடம்பிடித்தல் நடக்கிறது.
தெப்பத்தேர் : விழாநிறைவு நாள் ஜன.,27ல் தெப்பக்குளத்தில் மாலை 6 மணிக்கு மேல் தெப்போற்சவம் நடக்கிறது. விழாநாட்களில் முத்துகுமாரசுவாமி, வள்ளி. தெய்வானையுடன் வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா செய்துள்ளனர்.