பதிவு செய்த நாள்
29
ஜன
2016
05:01
சக்தி, வீரம், உறுதி, துணிவு என்று பேராற்றுலுக்கான சொற்களைப் பட்டியிலிட்டால், அவையனைத்துக்கும் ஒருவருமாக தோன்றுபவர் ஆஞ்சநேயர். இவர் பல தலங்களில் கோயில்கொண்டு அன்பர்களுக்கு எளியோனாய் ஓடி வந்து அருளுவதை பல பக்தர்களும் தங்கள் அனுபவத்தில் கண்டுள்ளனர். அத்தகைய அனுமன் கோயில் கொண்டுள்ள தலம்தான் சலாசர் பாலாஜி கோயில். ராஜஸ்தான் மாநிலத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. அந்தப் பகுதிகளில் பாலாஜி என்னும் சொல் அனுமனையே குறிக்கும். 1754-ல் இக்கோயில் அமைக்கப்பட்டது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு,.
அசாட்டோ என்னும் கிராமத்தில் விவசாயி ஒருவர் வயலில் உழுதுகொண்டிருந்தார். அப்போது அவர் கலப்பையில் ஏதோ தட்டுப்பட, என்னவென்று பார்த்தபோது ஆஞ்சநேயர் சிலை அச்சமயம் அவரது மனைவி அவருக்கு உணவு கொண்டுவர, விஷயத்தை மனைவியிடம் சொன்னார். இதை உடனடியாக கிராமத் தலைவரிடம் சொல்ல வேண்டுமென்று அவள் சொல்ல, இருவருமே புறப்பட்டுச் சென்று கிராமத் தலைவரிடம் விவரம் கூறினர். ஆச்சரியப்பட்ட அவர், முதல் நாள் இரவே இதுபற்றி தனக்கு கனவு வந்ததாகவும் சிலையை சலாசர் பகுதியில் பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவானதாகவும் அவர் தெரிவித்தார். அந்த நேரத்தில் அங்குவந்த மோகனதாஸ் மகாராஜ் என்பவர், “இந்த ஊரில் அனுமன் சிலை ஏதேனும் கிடைத்திருக்கிறதா?” என்று கேட்க இவர்கள் மேலும் திகைத்தார்கள்” அந்த சிலையை சலாசர் பகுதியில் பிரதிஷ்டை செய்யும்படி அனுமன் கனவில் கூறினார்” என்று அவர் சொல்ல, இறையருளை எண்ணி உருகிநின்றனர். பின்னர் அந்த சிலை அனுமன் உத்தவுப்படியே சலாசரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வயலில் அனுமன் சிலை கிடைத்த நாள், ஒரு சிராவண மாதம் சனிக்கிழமை, வளர்பிறை நவமி திதியில்.
இந்த சிலை நிறுவப்பட்டபோது சாதாரணமாக இருந்த அப்பகுதி பின்னர் ஊராகிவிட்டது. பிற்காலத்தில் ராஜா தேவிசிங் என்ற மன்னன் இக்கோயிலை மேலும் விரிவாகக் கட்டினான். இந்த அனுமன் விக்ரகம் அரைவட்ட வடிவில் காணப்படுகிறது. அனுமனுக்கு மீசையும் தாடியும் உள்ளது. தாதிஜ் என்னும் கோத்திரத்தைச் சேர்ந்த அந்தணர்களே இங்கு அர்ச்சகராகப் பணிபுரிகின்றனர். கோயில்நிர்வாகத்தை அனுமன் சேவா சமிதி என்னும் அமைப்பு கவனித்துவருகிறது. காலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். அனுமன் ஜெயந்தி போன்ற முக்கிய விழா நாட்களில் எப்போதும் திறந்திருக்கும். கோயில் வளாகத்தில் தினமும் ராமாயண பாராயணம் செய்யப்படுகிறது. சுந்தரகாண்டமும் படிக்கப்படுகிறது. 24 மணிநேரமும் பஜனைக் கீர்த்தனைகள் நடக்கும்.
பல்வேறு கோரிக்கைகளுக்ககாக பக்தர்கள் இங்கேவந்து வேண்டிக்கொள்கிறார்கள்.அப்படி வருபவர்கள். ஒரு முழுத் தேங்காயை மஞ்சள்நிறக் கயிறில் சுற்றி, அதை அங்குள்ள மரத்தில் கட்டி பிரார்த்தனையை சொல்லிவிட்டு வந்துவிடுவார்கள். அவர்கள் கோரிக்கை நிறைவேறியதும் மீண்டும் கோயிலுக்கு வந்து, ஐம்பது கிலோ பிரசாதத்தை வாங்கி தானம் செய்கிறார்கள். இந்த தேங்காய் வழிபாட்டு வழக்கம் ராஜா தேவிசிங் காலத்திலிருந்து வழக்கத்திலுள்ளன. பிள்ளைப் பேறின்றி வருந்திய தேவிசிங் ஒரு முனிவரின் ஆலோசனைப்படி தேங்காய் வழிபாடு செய்து வேண்டிக்கொள்ள, பிள்ளைப்பேறு கிடைத்தது எனவே மன்னன், இப்படி வழிபடும் மக்களின் கோரிக்கையையையும் நிறைவேற்ற வேண்டும். என்று வேண்டிக் கொள்ள, அப்படியே அருளினார் அனுமன். வேண்டுதல் நிறைவேற்றிய பக்தர்கள் பிரசாத தானம் செய்வதை பரவலாகக் காணமுடிகிறது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரிலிருந்து சுமார் 170 கிலோமீட்டர் தொலைவில் (என்எச் 65) உள்ளது சலாசர். அருகிலுள்ள ரயில் நிலையம் சஜங்கார். இங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.