மதுராவில் யமுனை நதிக்கரையில் குஞ்சகாலி என்ற இடத்தில், துவாரகாதீஷ் என்றழைக்கப்படும் கிருஷ்ணருக்கு பிரமாண்டமான கோயில் அமைந்துள்ளது. கம்சவதம் முடிந்ததும் கிருஷ்ணன் இந்த இடத்திற்கு வந்து ஓய்வெடுத்துக்கொண்டு பிறகு துவாரகா சென்று ராதையோடு மகிழ்ச்சியுடன் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்கு ஆதாரமாக கோயிலுக்குள் ஓர் ஆலமரத்தின் அடியில் கிருஷ்ணரின் பாதச்சுவடுகள் காணப்படுகிறது. கிருஷ்ணபரமாத்மா இங்கு வந்து சென்றதன் நினைவாகக் கட்டப்பட்ட கோயிலுக்கு பக்தை மீராவும் விஜயம் செய்து கிருஷ்ணரை தரிசித்துப் பல பாடல்களைப் பாடியுள்ளார். மீரா இசைத்த தம்பூரா பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சீடர்களுடன் இங்கு வந்த மகான் சைதன்ய பிரபு, மதுராவை அழகான நகராக மாற்றி ஜாதி, மதமற்ற சமுதாயத்தை உருவாக்க பிரசாரம் செய்தார். அத்வைத தத்துவத்தையும் கிருஷ்ணனின் பெருமையையும் எடுத்துக்கூறி மக்களை நல்வழிப்படுத்தினார். 4-ம் நூற்றாண்டில் இங்கு வந்த சீன யாத்ரிகர் மெகஸ்தனிஸ் இப்பகுதியைப் பார்த்துவிட்டு கிருஷ்ண வழிபாட்டுக்குரிய முக்கிய தலம் இது என்றார். 6-ம் நூற்றாண்டில் இப்பகுதியை மயூர மன்னர் ஆண்டு வந்தபோது மதுராவுக்கு அருகில் சொன்க் என்ற இந்துக்கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. இவரது ஆட்சியைப் பொற்கால ஆட்சி என்கிறார்கள். மொகலாய மன்னன் ஜஹாங்கீர் இங்கு படையெடுத்து வந்தபோது கிருஷ்ணன் கோயில்களையும், அதன் அற்புதத் தோற்றத்தையும் பார்த்து பிரமித்து, இங்கு வாழும் ஒரு சிறு பறவைக்கூட யாரும் தீங்கு செய்யக்கூடாது. என்று உத்தரவிட்டுவிட்டு போர் செய்யாமலேயே திரும்பிச் சென்று விட்டார். ஆண்டு முழுவதும் பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து பகவத்கீதை படிக்கிறார்கள்.
சுவரிலும் பகவத்கீதை செதுக்கப்பட்டுள்ளது. கோகுலாஷ்டமி அன்று கிருஷ்ணர் குஞ்சகாலி நகரம் முழுவதும் ஊர்வலமாக வந்து பக்தர்களை ஆசீர்வதிக்கிறார். மாலை வேளையில் கோயிலைச் சுற்றி ஏராளமான தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டு கோயில் ஒளிவெள்ளத்தில் மிதக்கும். அன்று நடைபெறும் ஆண், பெண் பக்தர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் காண்போரை வசீகரிக்கும். எங்கே இருக்கு? உத்திரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில், யமுனை நதிக்கரையில் விஷ்ராம் கட் என்ற ஸ்நான படித்துறை அருகே குஞ்சகாலி என்ற இடத்தில் துவாரகாதீஷ் என்ற கிருஷ்ணன் கோயில் அமைந்துள்ளது. டெல்லியிலிருந்து 140 கி.மீ. தூரத்தில் மதுரா உள்ளது.