பதிவு செய்த நாள்
30
ஜன
2016
01:01
கடலுார்: கடலுார் அண்ணா நகரில் புதுப்பிக்கப்பட்ட சர்வ சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடலுார், அண்ணா நகரில் உள்ள சர்வ சக்தி விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு, புதிதாக ராஜகோபுரம் கட்டி, சிவகாம சுந்தரி சமேத நடராஜர் உள்ளிட்ட சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்ததையொட்டி நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான பூர்வாங்க பூஜை கடந்த 25ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. மாலை கரிக்கோலம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி நடைபெற்றது. மறுநாள் 26ம் தேதி காலை சுதர்சன, தன்வந்திரி ஹோமங்களை தொடர்ந்து மிருத்சங்கிரகணத்தைத்தொடர்ந்து விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்து அஷ்டபந்தனம் செய்யப்பட்டது. மாலை அஷ்டலட்சுமி, மிருத்யுஞ்ய மற்றும் சண்முக ஹோமங்கள் நடைபெற்றது. 27ம் தேதி காலை யாக சாலையில் பாலிகை பூஜை, எஜமான ரக்சபந்தனம், சாந்தி மற்றும் நவக்கிரக ஹோமங்களை தொடர்ந்து மாலை ஆச்சார்ய நியமனம், ரக்ஷபந்தனம், கும்ப அல்ஙகார மற்றும் முதல்கால யாக பூஜை, பூர்ணாஹூதி நடைபெற்றது. நேற்று காலை இரண்டாம் கால பூஜை, சுமங்கலி, கன்னிகா, தம்பதி மற்றும் வடுக பூஜைகளை தொடர்ந்து தீப பிரதிஷ்டையும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று (29ம் தேதி) அதிகாலை 4:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, கோ–பூஜை, தத்துவார்ச்சனை, நாடி சந்தானம், திரவிய ஹோமம் மற்றும் பூர்ணாஹூதி, தீபாராதனையைத் தொடர்ந்து காலை 8:40: மணிக்கு கடம் புறப்படாகி விமானங்கள், ராஜகோபுரம் மற்றும் சந்நதிகளுக்க முகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை எஜமான உற்சவம் நடைபெற்றது. மாலை 3:00 மணிக்கு உற்சவமூர்த்திகள் மகா அபிஷேகமும், இரவு சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது.