புண்ணியகோடி, தனுஷ்கோடி என்றெல்லாம் பிள்ளைக்கு பெயரிட்டு அழைப்பார்கள். ஆனால், ராமகோடி என்று யாருக்கும் பெயரிடுவதில்லையே என்று யோசிப்பீர்கள். கோடிமுறை ராமநாமத்தை எழுதுவது அல்லது ஜெபிப்பதைத் தான் ராமகோடி என்பர். தினமும் நீராடியபின் பக்தி சிரத்தையுடன் ராமநாமம் எழுதுவதை சிலர் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ராமகோடி எழுதவேண்டும் என்று சங்கல்பம் எடுத்துக் கொண்டவர்கள் ஒரு நாளைக்கு 1000 முறை ராம் என்றோ ஸ்ரீராமஜெயம் என்றோ எழுதலாம். இவ்வாறு எழுதினால் ராமகோடி பூர்த்தியாக 30 ஆண்டுகள் ஆகும். எழுதிய நோட்டை தெய்வம் போல பாவித்து பூஜையறையில் வைப்பது அவசியம். வெறும் எண்ணிக்கையில் மட்டும் கவனம் இல்லாமல் பக்தியோடு எழுதும்போது இது ஒரு தவமாக மாறிவிடும். இந்த நோட்டுகளை பூஜைஅறையில் வைத்து வழிபட்டு வந்தால் அப்புண்ணியம் நம் தலைமுறையினருக்காகவும் காத்து நிற்கும்.