சனி பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 12 வருடகாலம் இருந்துவிட்டு வெளியேறும்போது, உலகில் ரோகிணி சகடபேதம் எனும் கடும் பஞ்சம் ஏற்படும். தசரதர் அயோத்தியை ஆட்சி செய்தபோது இதே நிலை ஏற்பட்டது. அயோத்திக்கு இத்தகைய பஞ்சம் வருவதை நாரதர் மூலமாக தெரிந்து கொண்டார் தசரதரின் குருவான வசிஷ்டர். இதை தசரத சக்கரவர்த்தியிடம் கூறி நடவடிக்கை எடுக்கும்படி சொன்னார். உடனே தசரதர் மக்களை காப்பதற்காக சனிபகவான் ரோகிணியை விட்டு விலகும் முன்பு தடுத்து நிறுத்தி போர் புரிய எண்ணினார். ஆனால் அவரை வெற்றி பெறுவது எளிதான விஷயம் அல்ல என்பதால் அவரிடம் பணிந்து வேண்டினார். நாட்டு மக்களை துன்பத்திலிருந்து காப்பதற்காக முன்னெச்சரிக்கையாக தன்னை வணங்கிய தசரதரின் கடமை உணர்வை பாராட்டிய சனிபகவான், தான் அயோத்தி மக்களை ரோகிணி சகடபேத காலத்தில் தொந்தரவு செய்யமாட்டேன் என்று உறுதி அளித்தார். கடமை உணர்வு கொண்டவர்களை சனீஸ்வரர் தொந்தரவு செய்யமாட்டார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.